புரெவி புயலால் பரவலாக மழை..!

0 2552
புரெவி புயலால் பரவலாக மழை..!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் நேற்றிரவு தொடங்கிய மழை விட்டு விட்டு பெய்த நிலையில் அதிகாலையிலும் தொடர்ந்தது. இதனால், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கியது.

புரெவி புயல் காரணமாக சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்பட்டது. கடலோரப் பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தனர்.

நாகப்பட்டினம், வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து விடாமல் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 19 சென்டி மீட்டரும், தலைஞாயிறில் 14 சென்டிமீட்டரும் மழை பெய்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 12மணி நேரத்தை தாண்டி பெய்த மழையினால், சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் மாலையிலிருந்து தொடர்ந்து பெய்த மிதமான மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

இதேபோல் புதுக்கோட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பரவலாக நல்ல மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments