மர்மமான முறையில் மின்சாரம் தாக்கி சிறுவன், 4 நாய்கள் பலி

தேனி மாவட்டம் சுருளிப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் கிடந்த சிறுவன் அருகே 4 நாய்களும் சடலங்களாக கிடந்த மர்மம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த பரமன் என்பவரின் 16 வயதான தினேஷ், 10ம் வகுப்பு முடித்துவிட்டு மாட்டிற்கு புல்அறுக்கும் வேலை மற்றும் பால் கறக்கும் வேலை செய்து வந்தான். நேற்று மாலை புல் அறுக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற அவன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் சுருளிப்பட்டி கிழக்குப்புறம் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உயிரிழந்து அவன் சடலமாக கிடந்தான். அவன் அருகே 4 நாய்களும் சடலங்களாக கிடந்தன.
தகவலின்பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பரிசோதித்ததில் சிறுவனிடமும், நாய்களிடமும் மின்சாரம் தாக்கியதற்கான காயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முற்பட்டனர்.
அப்போது அங்கு திரண்ட உறவினர்கள், சிறுவன் சாவுக்கு காரணமானோரை கைது செய்ய வேண்டும் என்றும், இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டோருடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்து செல்ல அனுமதித்தனர். சிறுவன் மற்றும் 4 நாய்கள் சடலமாக கிடந்த இடத்தில் மின்சார வேலி இல்லை.
இதனால் நாய்களுடன் வேட்டைக்கு வந்தபோது வேறு இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவனும், நாய்களும் பலியாகி இருக்கலாம் எனவும், இதையடுத்து சடலத்தை கொண்டு வந்து வீசி சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இதேபோல் சிறுவனுடன் மேலும் சிலரும் வந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கபடுகிறது. அந்த நபர்கள் யாரென்பது தெரிந்தால், சிறுவன், நாய்கள் எங்கு மின்சாரம் தாக்கி இறந்தனர் என்பது தெரிய வரும் என்பதால், அவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments