"புரெவி புயலை எதிர்கொள்ள" முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

0 1623
"புரெவி புயலை எதிர்கொள்ள" முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!

வங்கக் கடலில் உருவாகியுள்ள புரெவி புயலின் காரணமாகத் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறைகளின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாகக் கரைதிரும்ப வேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குக் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்துக் கரை திரும்பிய படகுகள் அனைத்தும் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிக்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் 40 பேர் வந்துள்ளனர். இவர்கள் தூத்துக்குடி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது புயல் மழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைக் காப்பது குறித்து வீரர்களுக்கு ஆய்வாளர் சவுத்ரி அறிவுறுத்தினார்.

அரக்கோணத்தில் இருந்து தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் 60 பேர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் யாரும் ஆற்றுக்குக் குளிக்கச் செல்ல வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்துள்ள தேசியப் பேரிடர் மீட்புக் குழுக்களில் ஒரு பிரிவினர் கடலோரப் பகுதியான கூட்டப்புளிக்குச் சென்றுள்ளனர். கடலோரத்தில் கூத்தங்குழி, உவரி, இடிந்தகரை, பெருமணல் உட்பட 10 ஊர்களைச் சேர்ந்த எட்டாயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. தங்கள் படகுகளைக் கடலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மீட்புப் பணிகளை மேற்கொள்ள இராமநாதபுரம் மாவட்டத்துக்குச் சென்னையில் இருந்து மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர் 35 பேரும், தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் 100 பேரும் வந்துள்ளனர்.

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மீட்புப் படையினர் ஒன்றுகூடிப் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிக்குத் தேவையான கருவிகளைத் தயார்படுத்தினர். இதை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் பார்வையிட்டார். அதன்பின்னர் மீட்புப் படையினர் 11 குழுக்களாகப் பிரிந்து தனுஷ்கோடி, ராமேஸ்வரம், பாம்பன், சாயல்குடி, வாலிநோக்கம் ஆகிய கடலோரப் பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கான படகுப் போக்குவரத்து 4 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் இன்றிக் கடற்கரை வெறிச்சோடிக் காணப்படுகிறது. கன்னியாகுமரிக்கு வந்துள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் கடற்கரைக்குச் சென்று  பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், காவல் கண்காணிப்பாளர், அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அனு ஜார்ஜ், வெள்ளம் சூழும் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நிவாரண 21 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள், குடிநீர், சமையல் பாத்திரங்கள் ஆகியன இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்கள், தீயணைப்புத் துறை அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளதாகச் சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments