சென்னைக்குள் நுழைய முயற்சி.. பாமகவினர் தடுத்து நிறுத்தம்.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு..!

0 2207

சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில், பாமகவினர், போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும், வன்னியர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க கோரி, பாமகவினர், சென்னையில் போராட்டம் அறிவித்திருந்தனர். இதையடுத்து, பல மாவட்டங்களில் இருந்து, தனியார் பேருந்துகள், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில், பாமகவினர் சென்னை பெருநகரை நோக்கி, இன்று காலை முதலே வரத் தொடங்கினர்.

இதையடுத்து, சென்னையின் எல்லைப் பகுதிகளான, பெருங்களத்தூர், பூந்தமல்லி-நசரத்பேட்டை, செம்மஞ்சேரி, கானத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில், தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். 

தற்போது, கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதாலும், சென்னையில் ஆர்ப்பாட்டம், பேரணிக்கு அனுமதி கிடையாது என்ற மாநகர காவல்துறை தடை சட்டம் நடைமுறையில் இருப்பதாலும், வெளிமாவட்டங்களிலிருந்து போராட்டத்திற்கு வந்தவர்கள், பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

குறிப்பாக, பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில், ஜிஎஸ்டி சாலையில், போராட்டத்திற்கு வந்தவர்கள் அதிகளவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, சாலையின் இருவழித்தடங்களிலும், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

இதற்கிடையே, பெருங்களத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஒருபகுதியினர், ரயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது கற்களை வீசிய பாமகவினர், அதை தடுத்து நிறுத்தினர். 

மேலும், அதேசமயத்தில், சென்னைக்கு வரும் வழித்தடத்திலும், சென்னையிலிருந்து, செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்திலும், பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பெருங்களத்தூர் பகுதியிலிருந்து, தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள், மதுரவாயல் புறவழிச்சாலையில், திருப்பி விடப்பட்டன. தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் இருந்து, தாம்பரம் பேருந்து நிலையம் வரையிலான, பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தன. இந்த போக்குவரத்து பாதிப்பில், ஆம்புலன்சுகளும் சிக்கிக் கொண்டன. இதேபோன்று, வேலைக்காகச் சென்றவர்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக, பயணமானவர்கள் அனைவரும் கடும் அவதிக்கு ஆளாகினர். 

போராட்டத்தில் ஈடுபட வந்தநிலையில், பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டவர்களில் சிலர், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை அகற்றி, ஆவேசத்தை வெளிப்படுத்தினர்... 

முதற்கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, தாம்பரம் வரையில் அனுமதிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இவ்வாறு வந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒருபகுதியினர், தாம்பரம் மேம்பாலத்திற்கு முன்பு சோதனைச் சாவடி பேரிகார்டுகளை ஆவேசமாக அகற்றினர். 

இதையடுத்து, தாம்பரம் நோக்கி வந்த வாகனங்கள், சேலையூர் பகுதிக்கு திருப்பி விடப்பட்டு, சேலையூர் கேம்ப் ரோடு பகுதியிலும், தாம்பரம் பேருந்து நிலையம் - இரும்புலியூர் இடையேயும், பாமகவினர் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. 

தாம்பரம் மேல்பாலத்தின் மேலும், அதன் கீழ்பகுதியிலும், பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, பொதுப் போக்குவரத்து வாகனங்களிலிருந்து கீழே இறங்கிய பொதுமக்கள், நடை பயணமாக செல்லத் தொடங்கினர். பாமகவினர் போராட்டத்தால், வேலைக்குச் செல்பவர்கள் உட்பட, பல்வேறு பணிகள் நிமித்தம் பயணமான பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். 

இதுதவிர, சென்னை பெருநகரில், 60க்கும் மேற்பட்ட இடங்களில், போராட்டத்திற்குச் சென்ற பாமகவினரை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி முதலமைச்சருடனான சந்திப்பிற்குப் பிறகு, பிற்பகல் 2 மணியளவில், பாமகவினர் கலைந்து சென்றனர். இதையடுத்து, காலை 10 மணியளவில் முடங்கத் தொடங்கிய போக்குவரத்து, 4 மணி நேரத்திற்குப் பிறகு சீரானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments