வங்க கடலில் புதிய புயல் - தென் கடலோர மாவட்டங்களில் கனமழை!

0 2057
வங்க கடலில் புதிய புயல் - தென் கடலோர மாவட்டங்களில் கனமழை!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறி உள்ளதால் தென்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 11 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, இது இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே 900 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயலானது, திரிகோணமலைக்கு அருகே, நாளை மாலை அல்லது இரவு கரையை கடக்கும். அதன்பின்னர் மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் தோன்றி 3 ஆம் தேதி தென் தமிழக கடலோரத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளது.

இதனால் தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு கேரள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments