கள்ளக்குறிச்சி: திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதால் ஆத்திரம்... காதலனைக் கொல்ல கூலிப்படையை ஏவிய காதலி!

0 18553

ள்ளக்குறிச்சியில், தன்னைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிறேன் என்று கூறி ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் ஆத்திரமடைந்த இரண்டு குழந்தைகளின் தாய், கூலிப்படையை ஏவி காதலனைக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் ரியாஸ் அகமது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ரியாஸ் அகமது சென்னையில் பணிபுரிந்தபோது நஜூரா பானு என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவரை இழந்த நஜூரா பானுவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் நெருங்கிப் பழகிய  நிலையில் ரியாஸ் அகமதுவைத் திருமணம் செய்துகொள்ள நஜூரா பானு வற்புறுத்தியுள்ளார். இதற்கிடையே, ரியாஸ் அகமது பணி நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு ஊர் திரும்பிய ரியாஸ் அகமது காதலிக்கு தெரியாமல் வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ரியாஸ் அகமது திருமணம் செய்துகொண்ட தகவல் கிடைத்ததும், நஜூரா பானு கடும் ஆத்திரமடைந்துள்ளார், ரியாஸ் அகமதுவை போனில் கூப்பிட்டு  ‘உன்னைத் தீர்த்துக்கட்டி விடுகிறேன் பார்’ என்றும் மிரட்டியுள்ளார்.

நஜூரா பானு மிரட்டியதால், திருமணம் முடிந்தபிறகு வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார் ரியாஸ். சில வாரங்கள் கடந்த நிலையில், ஏமப்பேர் பகுதிக்கு நேற்று ரியாஸ் அகமது இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்துள்ளார்.  அப்போது, ஆறு பேர் கொண்ட கும்பல் ரியாஸ் அகமதுவை விரட்டிச் சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டினர். கழுத்து, தோள், முதுகு என்று பல இடங்களில் வெட்டுப் பட்ட ரியாஸ் பைக்கைக் கீழே போட்டுவிட்டு ஓடி உயிர் தப்பினார். ரியாஸ் அகமது எழுப்பிய அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதையடுத்து தப்பி ஓடி விட்டனர்.  ரியாஸ் அகமதுவை கொலை செய்ய வந்தவர்கள்  முகத்தில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் யாராலும் அடையாளம் காண முடியவில்லை. பலத்த காயம் அடைந்த ரியாஸ் தற்போது சிகிச்சைக்காகச் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்குப் பதிவு செய்துள்ள கள்ளக்குறிச்சி போலீசார், தப்பிச்சென்ற கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். ரியாஸின் காதலி நஜூரா பானுவைத் தேடி சென்னைக்கு விரைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments