தடையை மீறி சென்னைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் : மறியல், கல்வீச்சு என களேபரம்

0 12841
வன்னியர்களுக்கு 20சதவீத இடஒதுக்கீடு கோரி பாமக இன்று சென்னையில் போராட்டம் - 5000 போலீசார் குவிப்பு

தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக சென்னைக்குள் நுழைய முயன்ற பாமகவினர் பெருங்களத்தூரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது, சாலையில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை ஆவேசமாக அகற்றிவிட்டு வாகனங்களில் தடையை மீறி சென்னைக்குள் நுழைந்தனர்.

அரசுப்பணியில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி, சென்னை பாரிமுனையில் டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே பாமக போராட்டம் அறிவித்திருந்தது. இதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் தாமஸ் மன்றோ சிலை அருகே கூடுவது என்றும், அதன் பிறகு பேரணியாகச் சென்று பாரிமுனை டிஎன்பிஎஸ்சி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்துவது என்றும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர்.

எனவே இந்த இரு இடங்களிலும், அதைச் சுற்றியும் சுமார் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தாமஸ் மன்றோ சிலை அருகே மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தார்.

சென்னைக்குள் பாமக நிர்வாகிகள் சுமார் 100 பேர் வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, பிற வடமாவட்டங்களில் இருந்து பாமகவினர் வருவதைத் தடுப்பதற்காக, சென்னைக்குள் நுழையும் இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், பேரிகார்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

தாமஸ் மன்றோ சிலை முன்பு பேரணியில் ஈடுபட முயன்ற பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த பெருங்களத்தூர் இரணியம்மன் கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, வாகனங்களில் வந்த பாமகவினர் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒரு கட்டத்தில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கியபோது, தங்களை தடுத்து நிறுத்துவதை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த காங்ரீட் மீடியன்களை அகற்றியதோடு, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை ஆவேசமாக அகற்றி, தங்களது வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர்.

பெருங்களத்தூர் ரயில் நிலையத்திற்குள் புகுந்த பாமகவினர் சிலர் அங்கு வந்துகொண்டிருந்த ரயில் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.

பாமகவினரின் திடீர் சாலை மறியலால் தாம்பரம் பெருங்களத்தூர் வண்டலூர் செங்கல்பட்டு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன், சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

பெருங்களத்தூரில் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் தாம்பரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதால், அங்கும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தேங்கி நின்றன.

செங்கல்பட்டு மாவட்ட எல்லையான ஆத்தூர் சுங்கச்சாவடியில் பாமகவினர் செல்லும் வாகனங்களை போலீசார் அனுமதித்தனர். வாகனங்களின் பதிவு எண்ணை குறித்துக் கொண்டு, சுங்க கட்டணம் வசூலிக்காமல் அனுமதித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டதால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தங்கள் கட்சியினரை அனுமதித்திருந்தால் அமைதியான வழியில் ஆர்பாட்டம் நடத்தி விட்டு சென்றிருப்போம் என்று குறிப்பிட்டார். போலீசார் தடுத்ததாலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கொரோனா காலமென்பதால் அனைவரும் மாஸ்க் அணிந்து போராட்டத்திற்கு கலந்துகொள்ள அறிவுறுத்தி உள்ளதாக அன்புமணி கூறினார். ஆனால் ஆர்ப்பாட்டம், சாலைமறியலில் ஈடுபட்டவர்களில் பலரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை.

பின்னர் தீவுத்திடல் மன்றோ சிலை அருகே செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி விகிதாசார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.

முன்னதாக, சிம்சன் பகுதியில், தந்தை பெரியார் சிலை அருகில், அன்புமணி வாகனத்தின் பின்னால் அணிவகுத்து சென்ற இரண்டு வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி வண்டியில் பயணித்தவர்களை கைது செய்தனர். சென்னையில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வன்னியர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில், 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவோடு, சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தங்களது கோரிக்கை தொடர்பாக நல்ல முடிவை அறிவிப்பதாக  என்று முதலமைச்சர் உறுதியளித்திருப்பதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments