சட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..! இனி காலமெல்லாம் களிதான்

0 12938
சட்டத்தால் விளையாடிய வக்கீல் தம்பதியருக்கு காலத்தின் தீர்ப்பு..! இனி காலமெல்லாம் களிதான்

கோவையில் வழக்கறிஞர் அலுவலகம் சென்ற பெண்ணை கொலை செய்து எரித்த வழக்கறிஞர் தம்பதியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள மோசடி வழக்கில் இருந்து மனைவியை காப்பாற்ற, சட்டத்தை பயன்படுத்தி வழக்கறிஞர் நடத்திய கொடூர விளையாட்டிற்கு காலம் தந்த தீர்ப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த தம்பதியரான ஈ.டி.ராஜவேல், மோகனா இருவரும் வழக்கறிஞர்கள்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜவேல், கோவை மாநகராட்சியில் தன் மனைவி இறந்து விட்டதாக தவறாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்யவேண்டும் எனவும்கூறி மனு அளித்திருந்தார். அவர் மனைவிக்கு வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழில் ராஜவேல் தான் ஒப்புதல் கையொப்பமிட்டிருந்ததால் அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து ராஜவேல் மீது போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டது. தன் மனைவி உயிரோடு இருப்பதாக, மோகனாவை போலீசார் முன்பு நிறுத்தினார் வழக்கறிஞர் ராஜவேல்...!

இதையடுத்து மோகனா மாரடைப்பால் உயிரிழந்ததாக சான்றழித்த செல்வபுரத்தை சேர்ந்த மருத்துவர் மோகன்ராஜிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று சடலத்துடன் வந்து சான்று கேட்டதால் தான் பரிசோதித்து வழங்கியதாக அவர் தெரிவித்தார். அப்படியென்றால் ராஜவேல் கொண்டு வந்த சடலம் யாருடையது ? எதற்காக ராஜவேல் அப்படி செய்ய வேண்டும் என்று விசாரணை ராஜவேல் பக்கம் திரும்பியது...!

கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜவேலுவின் மனைவி மோகனா ஒடிசா மாநிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தியதில் ரூ 12 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அங்குள்ள போலீசார் 6 வழக்குகள் பதிவு செய்து அவரை தேடி வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த வழக்கில் இருந்து மனைவி மோகனாவை காப்பாற்ற தனது வக்கீல் மூளையை கசக்கி யோசனையில் ஆழ்ந்துள்ளார் ராஜவேல், அப்போது கோவை சிவானந்தாகாலனியை சேர்ந்த அம்மாசை என்ற பெண் தனது கணவருக்கு தெரியாமல் தனது பெயரில் உள்ள சொத்து ஒன்றை தனது தம்பியின் பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுப்பதற்காக வழக்கறிஞர் ராஜவேலுவின் அலவலகத்திற்கு தனியாக வந்துள்ளார்.

தான் அவசரமாக சென்னை செல்லவிருப்பதாக அந்த பெண் கூறிக் கொண்டிருந்த நிலையில், அந்த பெண்ணை கொலை செய்து தனது மனைவி இறந்துவிட்டதாக ஆள்மாறட்டம் செய்யும் கிரிமினல் எண்ணம் ராஜவேல் மனதில் உதித்துள்ளது. இதையடுத்து அந்தப் பெண்ணை தனது அலுவலகத்தில் வைத்து ஓட்டுனர் பழனிச்சாமி உதவியாளர் பொன்ராஜ் துணையுடன் கழுத்தை நெரித்து கொலை செய்த ராஜவேல், அந்த பெண்ணின் சடலத்தை, தனது மனைவி மாரடைப்பால் பலியானதாக கூறி மருத்துவரிடம் சான்று பெற்றதும் வெளிச்சத்திற்கு வந்தது.

மருத்துவர் கொடுத்த சான்றிதழை அடிப்படையாக வைத்து மின்மயான ஊழியர்களிடம் எடுத்துச்சென்று சடலத்தை எரித்து முறைப்படி மாநகராட்சியிடம் இறப்பு சான்றிதழ் பெற்றதும் அம்பலமானது.

மனைவி பெயரில் புதிதாக ஒரு சொத்து வாங்க வேண்டும் என்பதால் அவர் உயிரோடு இருப்பதாக சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து அவரே வழியசென்று போலீசில் வசமாக சிக்கிக் கொண்டதும் தெரியவந்தது. பெண்ணை கொலை செய்தது தொடர்பாக வழக்கறிஞர் தம்பதியரான ராஜவேல், மோகனா, ஓட்டுனர் பழனிசாமி உதவியாளர் பொன்ராஜ் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மருத்துவர் மோகன்ராஜ், மின்மயான ஊழியர்கள் உள்ளிட்ட 50 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கோவை 5 வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஈ.டி.ராஜேவேல் அவரது மனைவி மோகனா உதவியாளர் பழனிச்சாமி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கிய நீதிபதி முகமது பாரூக், வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ஓட்டுனர் பழனிசாமிக்கு 7 வருடம் கடுங்காவல் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். மேலும் மூவருக்கும் 1லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாகவும் வழங்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் 4 வது குற்றவாளியான உதவியாளர் பொன்ராஜ் , முதலில் அப்ருவராகவும் பின்னர் பிறழ்சாட்சியாக மாறிய நிலையில் பொன்ராஜ் மீதான வழக்கு தனி வழக்காக விசாரணை நடைபெற்று வருகின்றது.

மோசடி வழக்கில் இருந்து காப்பாற்றிக்கொள்ள வழக்கறிஞர் தம்பதி, தாங்கள் படித்த சட்டத்தின் மூலம் நடத்திய விளையாட்டுக்கள், அவர்களை கொலை வழக்கில் சிக்கவைத்து, தற்போது ஜெயிலில் வாழ்நாள் முழுவதும் களி திண்ண வழி அனுப்பி வைத்திருப்பது தான் காலத்தின் தீர்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments