நிவர் புயல் பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு

சென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை ச பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ஒக்கியம் துரைப்பாக்கம் மடு பகுதியில் கரையோரங்களில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணி பார்வையிட்டார். பின்னர், முட்டுக்காடு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு நடத்தி, அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ஒவ்வொரு முறையும் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி சிரமத்திற்கு உள்ளாகும் மக்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக ஆய்வை மேற்கொண்டதாக கூறினார்.
முட்டுக்காடு முகத்துவாரத்தை 30 மீட்டரில் இருந்து 100 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீர் பக்கிங்காம் கால்வாய்க்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேற்கு தாம்பரம், வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்காமல் தடுப்பதற்கு அரசு தீர்வு காணும் என்றும் கூறினார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் மதகை மூட முடியாமல் தண்ணீர் வீணாகி விட்டது என்று எதிர்கட்சித் துணை தலைவர் துரைமுருகன் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, மதகில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்து மதகு மூடப்பட்டு நீர் சேமிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
Comments