பொது ஊரடங்கு உத்தரவு, தளர்வுகளுடன், மேலும் நீட்டிப்பு- முதலமைச்சர்

கல்லூரி, பல்கலைக்கழகங்கள் 7ஆம் தேதி முதல் திறப்பு, மெரீனா உள்ளிட்ட கடற்கரைகளில் 14ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி, உள்அரங்குகளில் அரசியல், மதம், பொழுதுபோக்கு சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி என மேலும் பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா பொது ஊரடங்கு டிசம்பர் மாதத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், பொது ஊரடங்கு உத்தரவு, மேலும் பல தளர்வுகளுடன், டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
அனைத்து கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கென விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் வரும் 7ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படடாலும், புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
நீச்சல் குளங்கள் விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. டிசம்பர் 14 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். இதேபோல சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது. இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம் தவிர வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதற்கான தடை தொடரும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
Tamil Nadu govt extends COVID-19 related restrictions till Dec 30; UG final year classes to begin from Dec 7, Chennai's Marina Beach to reopen after Dec 14, gatherings to be allowed with 50% capacity of the facility or up to 200 people.
— ANI (@ANI) November 30, 2020
Comments