தீபங்களால் ஒளிர்ந்த திருக்கார்த்திகை..!

0 2275
தீபங்களால் ஒளிர்ந்த திருக்கார்த்திகை..!

திருவண்ணாமலை:

கார்த்திகை தீபத் சிவபெருமானின் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 20ஆம் தேதி தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. 10ம் நாளான நேற்று அதிகாலை திருக்கோயிலின் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

மாலையில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளித்தனர். பின்னர் ஸ்வாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு வர பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் வீடுகளிலேயே தீபத்தை ஏற்றி வழிபட்டனர்.

திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள பிள்ளையார் கோவிலில் திருக்கார்த்திகை திருநாளையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் உள்ள உற்சவருக்கு பாலதீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி:

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் திருக்கார்த்திகை திருநாளையொட்டி பிரம்மாண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

பழனி:

பழனி முருகன் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டு, பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருத்தணி, சேலம், சுவாமிமலை உள்ளிட்ட முருகன் திருத்தலங்களில் கார்த்திகை தீபத் திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

சிதம்பரம்:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள நான்கு கோபுரங்களில் ஒவ்வொரு கோபுரத்திலும் 40 அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு கார்த்திகை தீபத் திருநாள் வழிபாடு நடத்தப்பட்டது.

ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சொக்கப்பனை மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை பெரியக் கோவிலில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜ கோவிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி சொக்கப்பனை தீபம் கொளுத்தப்பட்டது.

திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருகார்த்திகையை ஒட்டி சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

உதகை:

உதகை எல்க்ஹில் பாலதண்டாயுதபாணி திருக்கோவிலின் மலை உச்சியில் கார்த்திகை குமர தீபம் அரோகரா கோஷம் முழங்க ஏற்றப்பட்டது.

நாகை, ராஜபாளையம், பூந்தமல்லி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments