டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வுத்துறை

வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுத் தென்தமிழகம் நோக்கி வருவதால், தமிழகம், புதுச்சேரியில் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல், இந்தியப் பெருங்கடலின் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், அதன்பின் மேலும் வலுவடைந்து வடமேற்குத் திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் நாள் தென்தமிழகக் கடற்கரையை அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் ஆந்திரத்தின் தென் கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 1, 2 ஆகிய நாட்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. டிசம்பர் இரண்டாம் நாள் தென்தமிழகத்திலும், தென்கேரளத்திலும் ஒருசில இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் இந்தப் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஆகிய இடங்களில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, பாபநாசம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, பெருங்களூர், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், சேலம் மாவட்டம் ஆத்தூர், நீலகிரி மாவட்டம் குன்னூர் ஆகிய இடங்களில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments