ஈரான் நாட்டு தலைமை அணு விஞ்ஞானி சுட்டுகொலை!- இஸ்ரேல் கைவரிசை என்று குற்றச்சாட்டு

ஈரானின் அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானியும், பாதுகாப்பு அமைச்சக ஆராய்ச்சி அமைப்பின் தலைவராகவும் இருந்த மோசன் ஃபக்ரிஷாதே அடையாளம் தெரியாத தீவிரவாத கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஈரானிய அணுசக்தித்துறை திட்டங்களின் மூளையாகச் செயல்பட்டவர் மோசன் ஃபக்ரிஷாதே. இவரை, ‘ஈரானிய அணு உலகின் தந்தை’ என்றும் அழைப்பர்.
ஈரானின் அணு சக்தி மேம்பாட்டுக்கான யுரேனியம் செறிவூட்டல், அணுசக்தி திட்டங்களுக்கு மட்டுமின்றி ராணுவ அணு ஆயுத திட்டங்களின் பின்னணியில் இருந்தவர் மோசன் ஃபக்ரிஷதே. ஈரானிய புரட்சிகர ராணுவப்படையின் முக்கிய தலைவராகவும் இருந்தார். இந்த நிலையில், தெஹ்ரானில் உள்ள அப்சார்ட்டில் பகுதியில் இருந்து தனது காரில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்த சிலர் சரமாரியாகச் சுட்டனர். அப்போது ஃபக்ரிஷதேவின் பாதுகாவலர்களுக்கும் எதிர் தரப்புக்கும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. எனினும், எதிர் தரப்பினர் சுட்டதில் காருக்குள் இருந்த மோசன் ஃபக்ரிஷாதே உடல் முழுவதும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார்.
“ஈரானின் தலைசிறந்த விஞ்ஞானியைக் கொன்றுவிட்டனர். கோழைத்தனமான இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம்” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷாரிஃப் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏற்கெனவே, கடந்த 2010 - 2012 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஈரானி நாட்டின் அணுசக்தி விஞ்ஞானிகள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய தலைவரான சுலைமானி அமெரிக்காவால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார் .இந்த நிலையில், அணு விஞ்ஞானி கொல்லப்பட்ட விவகாரம் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ’ஈரானிய அணு ஆயுத திட்டங்களுக்கு தலைமை விஞ்ஞானி ஃபக்ரிஸாதே என்பதை எப்போதும் நினைவு வைத்து கொள்ளுங்கள்’ என்று ஒரு முறை கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments