மழை, வெள்ளத்தால் வேலூரிலும் பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
நிவர் புயல் காரணமாக வேலூர் மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை கொட்டியது. வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காட்பாடிசாலை, ஆற்காடுசாலை, ஆரணிசாலை, பெங்களூரு சாலை மற்றும் சத்துவாச்சாரி பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளித்தன. வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகேயுள்ள காவலர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை வெள்ளம் சூழந்தது.
வேலூர் கன்சால்பேட்டை காந்திநகர், இந்திராநகர், சம்பத்நகர், காட்பாடியில் சில பகுதிகள் என்று 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
ஜவ்வாதுமலைத் தொடரில் இருந்து உருவாகி மேல்அரசம்பட்டு வழியாக ஓடும் உத்திரகாவேரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் சென்றது.
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் பெய்த பலத்த மழையினால் மாங்காய் மண்டி அருகேயுள்ள நிக்கல்சன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கால்வாய்க்கு வரும் சிறிய கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக திடீர் நகருக்குள் மழைநீர் புகுந்து, அங்கிருந்த வீடுகளை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 3 படகுகளுடன் உடனடியாக அங்கு சென்றனர். அவர்கள் மாநகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறையினருடன் இணைந்து வீடு, வீடாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக கொட்டி தீர்த்த மழையால் 132 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, பப்பாளி, நெல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 72 மரங்கள், 10 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. 40 வீடுகளும் இடிந்துள்ளன. 1,120 பேர் மீட்கப்பட்டு 31 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Comments