வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... பஞ்சாப் விவசாயிகள் போர்க்கோலம்

0 1553

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லி நோக்கிச் செல்லும் விவசாயிகள், தங்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கும் முறைக்கு எதிராகப் புதிய வேளாண் சட்டங்கள் உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர். இதனால் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரிப் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதற்காக ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை டிராக்டர் டிராலிகளில் ஏற்றிக்கொண்டு குடும்பத்துடன் டெல்லி நோக்கிப் பேரணியாகப் படையெடுத்துள்ளனர். டெல்லி - அரியானா எல்லையில் சிங்கு என்னுமிடத்தில் அவர்களைக் காவல்படையினர் தடுத்து நிறுத்தினர்.

தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவலர்கள் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இருப்பினும் அந்த இடத்தைவிட்டு விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் வருகையைத் தடுக்க டெல்லி - குருகிராம் எல்லையில் வாகனங்களைத் தடுத்து நிறுத்திக் காவல்துறையினர் சோதனையிட்டதால் பல கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து வந்த விவசாயிகளைத் திக்ரி என்னுமிடத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சற்றும் பின்வாங்காத விவசாயிகள் காவல்துறையினருடன் நேருக்குநேர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். சாலைகளில் தடையரண்களாகக் குறுக்கே நிறுத்தப்பட்ட லாரிகளை டிராக்டர்களில் கட்டி இழுத்து அகற்றிவிட்டு விவசாயிகள் தொடர்ந்து முன்னேறிச் சென்றனர். 

இதனை தொடர்ந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்கும், புராரி என்னுமிடத்தில் உள்ள நிரங்காரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்தவும் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. சட்டம் ஒழுங்கை மதித்துப் பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும்படியும் விவசாயிகளை டெல்லி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதையடுத்து அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த விவசாயிகளின் வாகனங்கள் அனைத்தும் டெல்லி எல்லைக்குள் நுழைந்து புறப்பட்டுச் சென்றன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments