கொட்டித்தீர்த்த கனமழை...நீரில் மூழ்கிய பயிர்கள்

நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
நிவர் புயலின் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 3 நாட்களாகக் கன மழை பெய்தது. இதனால் விழுப்புரம், வாணியம்பாளையம், அரசமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் நடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. வயல்களின் வரப்பே தெரியாத வகையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலைத் தோண்டி நீரை வெளியேற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டாரத்தில் ஐயாயிரம் ஏக்கர் பரப்பில் விளைந்து அறுவடை செய்ய வேண்டிய நெற்பயிர்கள் கனமழையில் நனைந்து தரையோடு தரையாகச் சாய்ந்துள்ளன. ஓரிரு நாட்களில் மழைநீர் வடியாவிட்டால் நெற்கதிர்கள் முளைத்துவிடும் என்பதால் வயலில் இருந்து மழைநீரை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே வேளியூர், கோவிந்தவாடி அகரம், புதுப்பாக்கம் ஆகிய ஊர்களில் இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கரில் விளைந்துள்ள நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. ஓரிரு நாட்களில் நீர் வடியாவிட்டால் நெற்பயிர்கள் அனைத்தும் முளைத்து வீணாகிவிடும் நிலை உள்ளது. பாடுபட்டு விளைத்த பயிர்கள் அறுவடை செய்ய வேண்டிய காலத்தில் சேதமடைவது விவசாயிகளைக் கவலை அடையச் செய்துள்ளது.
இதே போன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவூர் குப்பநத்தம், கள்ளாத்தூர், ஊர்கவுண்டனூர், துரிஞ்சிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கனக்கான ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு இருந்தது. அறுவடைக்கு தயாராகி இருந்த நிலையில் நிவர் புயலால் வீசிய சூறாவளிகாற்றில் வாழை மரங்கள் குலையோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விழுப்புரத்தை அடுத்த ஆனாங்கூரில் முருகன் என்பவரின் வாத்துப் பண்ணையில் புதிதாக வாங்கி விடப்பட்டிருந்த நாலாயிரம் வாத்துக் குஞ்சுகள் மழைநீரில் மூழ்கி உயிரிழந்ததால் அவருக்கு 4 லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பேரிழப்பை ஈடுசெய்ய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments