"புதுச்சேரியை பதம் பார்த்த நிவர் புயல்" வெள்ளக்காடாக மாறிய தெருக்கள்...

0 2728
"புதுச்சேரியை பதம் பார்த்த நிவர் புயல்" வெள்ளக்காடாக மாறிய தெருக்கள்...

நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில், கனமழை காரணமாக, புதுச்சேரியில் பட இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகின.

நிவர் புயல் கரையைக் கடந்த போது, புதுச்சேரியில் அதிகனமழை பெய்தது. ஒரே நாளில் மட்டும் 30 செ.மீ. மழை பதிவாகியது. இதனால் புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடி இந்திரா சிலை சந்திப்பில் மழைநீர் குளம்போல் தேங்கியது. முதலமைச்சர் நாராயணசாமி இல்லம் அமைந்துள்ள எல்லை அம்மன் கோவில் வீதியிலும் மழை நீர் சூழ்ந்தது.

ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், ஜீவா நகர் பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடியே செல்லும் நிலை ஏற்பட்டது. மின்மோட்டார் மற்றும் பொக்லைன் இயந்திரம் கொண்டு மழைநீரை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

புயல் கரையைக் கடந்த போது, வீசிய காற்றால், பகதூர் சாஸ்திரி வீதி, மேட்டுப்பாளையம், முதலியார்பேட்டை, உப்பளம் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அதனை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு வீரர்கள் ஒன்றிணைந்து உடனடியாக அகற்றினர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக இரவு முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே மரம் விழுந்து மின் கம்பிகள் அறுந்தன.

உப்பளத்தில், மின்கம்பியில் சிக்கிய மரக்கிளையை ஊழியர் ஒருவர், உயிரை பணைய வைத்து அகற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகின.

புயலுக்குப் பின் மின் இணைப்பை சரி செய்வதற்காக ஆபத்தான பணியை மேற்கொண்ட மின்துறை ஊழியரை முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டினார். நகர் பகுதிகளில் காலை 9 மணிக்கே மின் இணைப்பு சரிசெய்யப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது.

தாழ்வான பகுதிகள், மீனவ கிராமங்களில் வசித்த மக்கள் 50 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் நாராயணசாமி, மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். இதனிடையே புதுச்சேரியில் 3 நாட்களாக அமலில் இருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments