புதுமண வாழ்க்கை குறும்படமான சோகம்..! தாலியை கழட்டியதால் விபரீதம்

0 125075
புதுமண வாழ்க்கை குறும்படமான சோகம்..! தாலியை கழட்டியதால் விபரீதம்

நாகர்கோவில் அருகே, திருமணம் முடிந்த ஒரே மாதத்தில்  ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காதல் மனைவி கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றியதால் கணவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது. குறும்படத்தால் இணைந்த ஜோடியின் திருமண வாழ்க்கையே குறும்படமான சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் 22 வயதான விஷ்ணு. குறும்படங்களைப் படம் பிடிக்கும் ஒளிப்பதிவாளரான விஷ்ணுவுக்கு திருப்பூரைச் சேர்ந்த 20 வயது பெண்ணான சாலினியின் அறிமுகம் கிடைத்தது.

ஆரம்பத்தில் நண்பர்களாகப் பழகிய இருவருக்குள்ளும் விஷ்ணுவின் குறும்படத்தின் மூலம் காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகின்றது. இதனையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.

நண்பர்களாகப் பழகிய போதும், காதலர்களாக சுற்றிய போதும் ஏற்படாத மனக்கசப்புகள் திருமணமான சில நாட்களிலேயே அவர்களுக்குள் ஏற்பட்டது. நண்பர்களுடன் செல்போனில் பேசுவது தொடங்கி, குடும்பத்தினர் தன்னைப்பற்றி விமர்சிப்பது வரை கணவர் விஷ்ணுவிடம் சாலினி குற்றப்பட்டியல் வாசிக்க, இருவருக்கும் இடையே பிரச்சனையாக உருவெடுத்தது.

இந்த நிலையில் இருவருக்கும் திங்கட்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆத்திரம் அடைந்த சாலினி , விஷ்ணுவை இழிவுபடுத்தும் விதமாக அவர் கட்டிய தாலியை கழற்றி வீசியதாக கூறப்படுகிறது. மனைவியின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷ்ணு, ஆத்திரத்தில் வேகமாக தனது அறைக்கு சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக் கொண்டார்.

சாலினியால் கதவைத் திறக்க முடியாமல் உதவிக்கு உறவினர்களை அழைக்க, நீண்ட நேரம் போராடி அவர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு புதுமாப்பிள்ளை விஷ்ணு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே தனது காதல் கணவர் விஷ்ணு தூக்கில் சடலமாக தொங்கியதை தாங்கிக்கொள்ள இயலாத சாலினி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கழுத்து அறுபட்டு ரத்தம் வழிந்தோடிய நிலையில் உயிருக்கு போராடிய சாலினியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், விஷ்ணுவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கழுத்தில் காயம் அடைந்த சாலினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், எதற்காக இந்த காதல் தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது என்று விசாரிக்க இயலவில்லை என்று கூறும் கோட்டார் போலீசார், இன்றைய இளசுகள் வாழ்க்கை குறித்த எந்த புரிதலும் இல்லாமல், நட்பில் தொடங்கி, காதலில் விழுந்து, திருமண வாழக்கையில் இணைந்த சில மாதங்களிலேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஆளுக்கொரு திசையாக பிரிந்து சென்றுவிடுவதாக சுட்டிக்காட்டினர்.

அதே நேரத்தில் வண்ணமயமாக பாடம் பிடித்த குறும்படத்தால் காதலியை கரம் பிடித்த விஷ்ணுவின் திருமண வாழ்க்கை, விட்டுக்கொடுத்தல் என்ற முக்கிய புள்ளியில் இணையாததால் ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்து போன குறும்படமானது தான் சோகம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments