நிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.!

0 1740
நிவர் புயல் எதிரொலி முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்.!

நிவர் புயல் எதிரொலியால், தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் பகுதிகளில், மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. 

கடலூர் மாவட்டத்தில், கடலூர், தேவானம்பட்டினம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பேரிடர் குழுக்கள், வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மழை வெள்ளத்தின்போது, தண்ணீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் நடவடிக்கையாக, தென் பெண்ணையாறு, கெடிலம் ஆறு கடலில் இணையும் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதியான மரக்காணத்தில், கடல் சீற்றமாக காணப்படுவதுடன் பேரலைகள் எழுகின்றன. பலத்த காற்றுடன், மழையும் பெய்து வரும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

அழகன்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழை-வெள்ள மீட்பு முகாம்களையும் பார்வையிட்டார். மரக்காணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்படுகிறது. 

திருவாரூர் மாவட்டத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட, 1200 போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கான பிரத்யேக பயிற்சிகளை பெற்றுள்ள போலீசாரை சந்தித்த, திருவாரூர் எஸ்.பி துரை, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

திருத்துறைப்பூண்டியிலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவர் புயலை எதிர்கொள்வதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிவர் புயல் நாளை மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், முட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மீனவர்கள் தங்கள் படகுகளை, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். கடல் சீற்றமாக காணப்படும் நிலையில், ஆபத்தை உணராது உலா வந்த இளைஞர்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்படும் இடங்களாக நாகை மாவட்டத்தில் 374 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தஞ்சாவூரில், "நிவர்" புயலால், வெள்ள ஏற்பட்டு, ஆற்றங்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் அதைத் தடுப்பதற்காக, கரைகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

புயல் எதிரொலியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதால், முக்கிய சாலைகள் வெறிச்சோடின. தஞ்சாவூர் மாவட்ட கடலோர பகுதிகளில், அரசு அதிகாரிகள், மற்றும் போலீசார், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments