புயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்?

0 3939
புயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள்?

புயல் நிலவரத்தை குறியீடுகள் மூலம் அறிவிக்கும் புயல் எச்சரிக்கைக் கூண்டுகளின் 11 நிலைகள் குறித்து பார்க்கலாம்....

புயல் சின்னம் உருவாவதில் இருந்து அதி தீவிர புயலாக மாறி கரை கடப்பது வரையிலான மாற்றங்களை குறிக்க துறைமுகங்களில் 1 முதல் 11 வரை வெவ்வேறு எண்களில் புயல் கூண்டுகள் ஏற்றப்படும். புயல் உருவாகக்கூடிய வானிலை உருவாகியுள்ளது, துறைமுகத்தில் பலத்த காற்று வீசும் என்பதைக் குறிக்க ஒன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்படும்.

புயல் உருவாகி விட்டதை எச்சரிப்பதற்காக இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்படுகின்றது. 2ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால் கப்பல்கள் துறைமுகங்களை விட்டு வெளியேற வேண்டும்.

திடீர் காற்றோடு மழை பொழியக்கூடிய வானிலை குறித்து எச்சரிக்க மூன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பதைக் குறிக்க நான்காம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகின்றது. உருவாகியுள்ள புயல் துறைமுகத்தின் இடதுபுறமாக கடந்து செல்லும் வாய்ப்பை 5ஆம் எண் கூண்டும், வலதுபுறமாக கடந்து செல்லும் வாய்ப்பை 6ஆம் எண் கூண்டும் குறிக்கின்றன. ஏழாம் எண் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் வழியாகவோ அல்லது அருகிலோ புயல் கரையைக் கடக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும். 5, 6, 7 ஆகிய மூன்று கூண்டுகளும் மோசமான வானிலையால் துறைமுகத்திற்கு ஏற்படும் நேரடி பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதைக் குறிப்பவை.

புயல், தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிரப் புயலாகவோ உருவெடுத்து துறைமுகத்திற்கு இடதுபக்கமாக கரையை கடக்கும் என்பதை 8ஆம் எண் எச்சரிக்கை கூண்டு தெரியப்படுத்துகிறது.

புயல், தீவிர புயலாகவோ அல்லது அதி தீவிரப் புயலாகவோ உருவெடுத்து, துறைமுகத்தை புயல் வலது பக்கமாக கடந்து செல்லும் என்பதைக் குறிக்க 9ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது, அது துறைமுகம் அல்லது அதன் அருகே கடந்து செல்லும் அபாயம் ஏற்பட்டிருப்பதையும், மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருப்பதை குறிக்க பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.

உச்சபட்சமாக 11-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். மோசமான வானிலை, வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் தொடர்பு முற்றிலும் முறிந்துபோனது என்பதைக் குறிக்கவே 11-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments