நிவர் புயல் தீவிரம்: தமிழகத்தின் பல இடங்களில் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும் கடல்

0 8116
நிவர் புயல் தீவிரம்: தமிழகத்தின் பல இடங்களில் மிகுந்த சீற்றத்துடன் காணப்படும் கடல்

நிவர் தீவிர புயலாக நாளை கரைகடக்க உள்ள நிலையில், தமிழகத்தின் பல இடங்களில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகிறது. 

மாமல்லபுரம் - காரைக்கால் இடையே நிவர் புயல் நாளை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் பகுதியில் கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது. கரையோரம் இருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்தூர், ஊரப்பாக்கம், திருப்போரூர், திருக்கழுகுன்றம், ஆகிய பகுதிகளில் நள்ளிரவு முதலே மழை கொட்டித் தீர்த்தது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதியில்லாத காரணத்தினால் கேளம்பாக்கம், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம், புதுபட்டினம், கூவத்தூர் பகுதிகளில் உள்ள மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம், கல்பாக்கம், புதுபட்டினம் பகுதிகளில் கடல் மிகுந்த சீற்றத்துடன் காணப்படுகின்றது. அலை 9 அடி உயரத்திற்கு அலைகள் எழுகின்றன.

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த வண்ணம் உள்ளது. கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்களது படகுகளை மற்றும் வலைகளையும் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கடலோர மீனவ கிராமங்களில் உள்ள மக்கள், புயல் பாதுகாப்பு மையத்தில் தங்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாகை மாவட்டத்தில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால், கரையோர மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தி வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை , புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகளையும் வலைகளையும் டிராக்டர் உதவியுடன் தூரமான மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, காட்டுப்பள்ளி, கோரைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. வங்கக் கடலில் நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில், மீனவர்கள் படகுகளை பத்திரப்படுத்தி வருகின்றனர்.

நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அங்கு கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. முதலமைச்சர் நாராயணசாமி, கரையோரப் பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார்.

மீன்பிடிக்கச் சென்றவர்கள் எல்லாம் கரை திரும்பியுள்ளனர். இதனால் படகுகள், விசைப்படகுகள் அனைத்தும் கரையில் அணிவகுத்து நிற்கின்றன. இன்று அதிகாலை முதலே புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments