வங்கக் கடலில் உருவானது "நிவர்" புயல்

0 5664
வங்கக் கடலில் உருவானது "நிவர்" புயல்

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, புதுச்சேரி அருகே, மாமல்லபுரத்திற்கும்-காரைக்காலுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு வங்கக் கடலில், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து நிவர் புயலாக வலுவடைந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே 450 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

நிவர் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுவடையக் கூடும். அடுத்த 12 மணி நேரத்திற்கு மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும்.

கடலோர தமிழகம்-புதுச்சேரி இடையே, புதுச்சேரிக்கு அருகே காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே நாளை மாலை தீவிர புயலாக கரையை கடக்கக் கூடும்.

அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகம் வரையில் புயல்காற்று வீசும். இதன் எதிரொலியாக 26ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பொழியும்.

புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், காரைக்கால், நாகை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே அதிகனமழை பெய்யும்.

கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் மாவட்டங்களில் நாளை ஆங்காங்கே அதிகனமழை பெய்யக்கூடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments