வங்கக் கடலில் உருவாகும் புயல் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

புயல் உருவாவதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யக் கூடும் என்றும், நாளையும், நாளை மறுநாளும் ஒருசில இடங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. இது இன்று அதிகாலை ஐந்தரை மணி நிலவரப்படி புதுச்சேரிக்குத் தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்குத் தென்கிழக்கே 630 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக உருவெடுக்கும் என்றும், அதன்பின் தீவிரப் புயலாக மாறிப் புதன் பிற்பகலில் காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வங்கக் கடலில் புயல் உருவாவதன் காரணமாகத் தமிழகம் புதுச்சேரியில் நாளை முதல் வியாழன் வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும், நாளையும், நாளை மறுநாளும் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக் கூடும் என்றும் தெரிவித்துள்ளது. புதனன்று தமிழகம் புதுச்சேரியில் ஒருசில பகுதிகளில் அதி கனமழை பெய்யக் கூடும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடல், மன்னார் வளைகுடா, தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று முதல் புதன் வரை பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
புதுச்சேரியில் நேற்று முதலே கடலின் சீற்றம் மற்றும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட படகுகளும் சின்ன வீராம்பட்டினம் நல்லவாடு உள்ளிட்ட எட்டு மீனவ கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் போன்றதொரு தாக்கத்தை, நிவர் புயல் ஏற்படுத்தாது என தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்க கடலில் புயல் உருவாகவுள்ள நிலையில், தாழ்வான பகுதிகள், பழைய கட்டிடங்களில் வசிக்கும் மக்கள் உடனடியாக முகாம்களில் வந்து தங்கி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மக்கள் அத்தியாவசிய பொருட்களை தற்போதே வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளவும், இடி, மின்னல் சமயத்தில் யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்டத்தில் 47 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மீன்பிடி வலைகளையும் பத்திரப்படுத்தினர். மீனவர்கள் கடற்கரை பகுதியில் இருந்து வெளியேறி புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் அரக்கோணத்தில் இருந்து வந்த, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தயார்நிலையில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கடலோரப் பகுதியில் 5 மீனவ கிராமங்கள் உள்ள நிலையில், கடல்சீற்றம் அதிகமாக இருப்பதால் கடலுக்கு மீனவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லவில்லை. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய உதவிகள் செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments