சென்னையின் தாகம் தீர்க்கும் 5ஆவது நீர்த்தேக்கம்..!

0 7616

சென்னையின் குடிநீர் தேவையை நிறைவு செய்ய, 5ஆவதாக, 380 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ள கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்தேக்கம் குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

ஆந்திர அரசு, கண்டலேறு அணையில் இருந்து, சென்னை குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை வழங்க வேண்டும். அந்நீரை சேமித்து வைக்கக் கூடிய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி மட்டும்தான். ஆகவே, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய இருஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டது.

சென்னை மாநகரத்தின் நீர்தேவையை நிறைவுசெய்யும், 5ஆவது நீர்த்தேக்கமாக கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை திட்டம் 380 கோடி ரூபாய் செலவில் 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த நீர்த்தேக்கத்திற்காக, வனத்துறை நிலம் உட்பட மொத்தம் 1485 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர், கண்டலேறு - பூண்டி கால்வாயிலிருந்து 8.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு இணைப்புக் கால்வாய் அமைத்து கொண்டு வரப்படுகிறது. நீர்த்தேக்கத்தை சுற்றி 7 ஆயிரத்து 150 மீட்டர் நீளத்திற்கு மண்கரை அமைக்கப்பட்டுள்ளது.

1,100 ஏக்கர் நீர்ப்பரப்பு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில், ஆண்டுக்கு 2 முறை, 500 மில்லியன் கனஅடி வீதம் ஒரு 1 டிஎம்சி நீர்தேக்கி வைக்கப்படும். சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்துக்கு அனுப்ப ஏதுவாக உள்வாங்கி கோபுரம் அமைக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 6.6 கோடி லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கண்ணன்கோட்டை, ராஜனேரி, தேர்வாய்கண்டிகை பெரிய ஏரிகள் மூலம் ஏற்கெனவே பாசன வசதி பெற்ற 700 ஏக்கர் நிலங்கள், புதிய திட்டத்தின் மூலம் பாசன வசதி பெறும் வகையில் 5 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சென்னையின் குடிநீர் பயன்பாட்டிற்காக கடைசியாக 1944-ஆம் ஆண்டு பூண்டியில் சத்யமூர்த்தி நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது. சுமார் முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய நீர்த்தேக்கத்தின் ஒரு பகுதியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு அடர்வனம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம், சுற்றுச்சூழல், மீன்வளத்தை பெருகுவதோடு, சுற்றுலாத் தளமாகவும் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments