உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திறந்து வைக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டம் உள்ளிட்ட 67 ஆயிரம் கோடி ரூபாய் திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். மாலையில் கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்க திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்காக அவர் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து 61 ஆயிரத்து 843 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்டம், சென்னை வர்த்தக மையம் 309 கோடி ரூபாயில் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
பாஜக நிர்வாகிகளை நாளை அவர் சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளார். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்தும், பிரச்சார வியூகம் பற்றியும் கட்சியினரிடம் எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது.
அமித்ஷா வருகையையொட்டி, விமான நிலையம், அவர் தங்கவிருக்கும் ஓட்டல், கலைவாணர் அரங்கம் பகுதிகளில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் விடிய விடிய ரோந்துப் பணி முடுக்கிவிடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
Comments