போலி உரம்... கருகிய பயிர்கள்!- மோசடி பேர்வழிகளால் கதறும் விவசாயிகள்

பெரம்பலூர் அருகே விவசாயிகளிடம் உரம் என சுண்ணாம்பு கற்களை ஏமாற்றி விற்ற உர வியாபாரிகளை கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட சிறுகுடல் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மானாவாரி சாகுபடியாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். அதே ஊரை சேர்ந்த உரம் மற்றும் பூச்சு மருந்து விற்பனையாளர்களான ராமலிங்கம் மற்றும் பேரளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக், துரைக்கண்ணு ஆகிய மூவரும் விவசாயிகளிடம் 1300 பாக்டாம்பஸ் உர மூட்டைகளை தலா 970 ரூபாய் வீதம், மொத்தம் ரூ. 12.50 லட்சத்துக்கு விற்றுள்ளனர். இந்த உரத்தை விவசாயிகள் மக்காச்சோள வயல்களில் தெளித்துள்ளனர்.
ஆனால், அதற்கு பிறகு நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை தந்தது. செழிப்புடன் நன்றாக வளர்ந்திருந்த மக்காச்சோள பயிர்கள், உரம் தெளித்த பின்னர் திடீரென கருகி போகின. சந்தேகமடைந்த விவசாயிகள் தாங்கள் தெளித்த உரத்தை சேதனை செய்து பார்த்த போது அவை அனைத்தும் சுண்ணாம்பு கற்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுகுடல் கிராம மக்கள் உரம் விற்பனை செய்த மூவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், நடந்த பேச்சுவார்த்தையின் ஒருரிரு நாட்களில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். ஆனால், உறுதியளித்தபடி, பணத்தையும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.
தொடர்ந்து, சிறுகுடல் கிராம விவசாயிகள் கருகிய மக்காச்சோள பயிர்களை கைகளில் ஏந்தி கடந்த 11- ந்தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மோசடி நபர்கள் மூவரையும் கைது செய்து, உர மூட்டைகளுக்கு கொடுத்த பணத்தை திரும்ப பெற்றுத்தருவதோடு, கருகிய மக்காச்சோள பயிருக்கு இழப்பீடும் வாங்கி தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், வேளாண் துறையின் மூலம் விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆய்வின் முடிவில் விவசாயிகளிடம் விற்கப்பட்டது போலி உரம் என கண்டறியப்பட்டு, மோசடி கும்பல் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு, வேளாண்துறை பரிந்துரை செய்தது.
அதன் பேரில் சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், பேரளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் சர்வேஸ்வரன் ஆகிய மூவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
Comments