அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு முறையுடன் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது

எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளுகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை நேரு விளையாட்டரங்கில் தொடங்கியது.
முதலில், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று முதல் கட்டமாக 267 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ-மாணவிகள்.
இதில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகள், அரசு சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இன்று தொடங்கி 3 நாட்களுக்கு அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் 21ஆம் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது.
அதன் பிறகு பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரத்து 650 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15 சதவீத இடங்கள் போக 3032 எம்பிபிஎஸ், 165 பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
15 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1147, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் 953 உள்ளன. 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 1065 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 695 இடங்களும் உள்ளன.
தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது #MBBSCounselling | #Students | #TamilNadu https://t.co/h9LQjO1S6i
— Polimer News (@polimernews) November 18, 2020
Comments