தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம்... 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பணிக்குச் சென்றவர்கள் நேற்று மாலை வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகினர். பகல் முழுவதும் விட்டுவிட்டுப் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. நுங்கம்பாக்கத்தில் முழங்கால் அளவு தண்ணீர் மக்கள் நடந்து சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர், செந்தமிழ் நகரில் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. காவனூர் ஏரி அருகே இருக்கும் தாழ்வான அந்த பகுதியில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணிக்குப் பிறகு மாநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை வெளுத்து வாங்கியது. இரவு நேரத்திலும் விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் தாழ்வான பகுதிகளில் குளம் போல தேங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை,பவானி, அந்தியூர், கொடுமுடி, மொடக்குறிச்சி உள்பட மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழையினால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளமென தேங்கியது.
இதேபோல் திருவள்ளூர், மயிலாடுதுறை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனிடையே, குமரிக்கடல் முதல் வடதமிழகம் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தின் கடலோரப் பகுதியில் அடர்த்தியான மேகக் கூட்டங்கள் திரண்டு இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் காலையில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிர்வாக ரீதியிலான சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments