வெள்ளத்தில் மிதக்கும் தூத்துக்குடி..! மீட்பு பணிகள் தீவிரம்

0 3949
கொட்டித்தீர்க்கும் கனமழையால் தூத்துக்குடி நகரம் மற்றும் கோவில்பட்டியின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

கொட்டித்தீர்க்கும் கனமழையால் தூத்துக்குடி நகரம் மற்றும் கோவில்பட்டியின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

தூத்துக்குடியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.

தூத்துக்குடி நகரத்தில் மட்டும் அதிகபட்சமாக 122.2 மில்லி மீட்டர் மழை பொழிந்தது. தொடர்ந்து மழை பொழிந்துவருவதால் தாழ்வான இடத்தில் கட்டப்பட்ட அரசு ஊழியர் குடியிருப்பு, பேருந்து நிலையம், நீதிபதிகள் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல புகுந்தது.

அரசு ஊழியர் குடியிருப்பில் தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் பலர் வீடுகளை காலி செய்து விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் சிலர் தங்கள் எலெக்ட்ரானிக் பொருட்களை கட்டில் மேல் தூக்கி வைத்து விட்டு அமர்ந்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சித் தலைவரே நேரடியாக வந்து பார்வையிட்டு, நீதிபதிகள் குடியிருப்புக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஏரியாகவும் குளங்களாகவும் இருந்த பகுதிகளை தேர்ந்தெடுத்து அரசு குடியிருப்புகளை கட்டியதால் மழை நீர் அங்கு தேங்குவதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டினர்.

அதே போல தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்தமருத்துவ பிரிவுக்குள் மழை நீர் மறுகால் பாய்ந்தது. இதனால் சித்தமருத்துவப் பிரிவு நீச்சல் குளம் போலக் காட்சியளித்தது. ஏற்கனவே துருப்பிடித்து இற்றுப்போய் நோயாளிகள் பயன்படுத்த இயலாத வகையில் காணப்பட்ட இரும்பு கட்டில்களை தண்ணீர் சூழ்ந்தது.

மில்லர்புரம் பகுதியிலும் சாலையில் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. அதே போல கோவில்பட்டியில் 73 மில்லி மீட்டர் மழை பதிவான நிலையில் அங்குள்ள காய்கனி மார்க்கெட் பகுதியில் கோணலாக அமைக்கப்பட்ட வடிகால் பாலத்தில் குப்பைகள் சேர்ந்து மழை நீர் வடிவதில் தடை ஏற்பட்டு மார்க்கெட்டிற்குள் மழை நீர் வெள்ளம் போல் புகுந்தது.

மார்க்கெட்டிற்குள் பல கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் வியாபாரிகள் அவதியடைந்தனர். சில வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. போதிய வடிகால்கள் இல்லாததும், மழை நீர் செல்லும் வழியை பிளாஸ்டிக் பைகள், மற்றும் கவர்கள் உள்ளிட்டவை அடைத்துக் கொள்வதாலும் மழை நீர் வடியாமல் குளம் போல தேங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அரசின் தடையை மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய சில வியாபாரிகளால் மழை நீர் வடிவதிலும், பூமிக்குள் செல்வதிலும் எவ்வளவு சிக்கல் உள்ளது என்பதை உணர்ந்தாவது வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் கைவிட வேண்டும்.

அதே நேரத்தில் மழைகாலத்திற்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகம் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இது போன்ற அவதிகள் மக்களுக்கு ஏற்படாது என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments