எரிவாயுக் கசிவால் தீவிபத்து 3 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றி வெடித்து வீடு இடிந்து தரைமட்டமான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சந்திரா என்பவர் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக எரிவாயுக் கசிவு இருந்ததாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் அதைச் சரிசெய்ய ஊழியர்கள் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்திரா இன்று காலையில் பாலைக் கொதிக்க வைக்க எரிவாயு அடுப்பைப் பற்றவைத்தபோது, அறையில் பரவியிருந்த எரிவாயு தீப்பற்றிக் கொண்டது.
இதையடுத்துப் பலத்த சத்தத்துடன் எரிவாயு உருளை வெடித்துத் தீப்பற்றியதில் அந்த வீடே இடிந்து தரைமட்டமானது. பக்கத்தில் உள்ள முத்தாபாய் வீடும், ஜானகிராமன் என்பவர் குடியிருந்த வாடகை வீடும் சேதமடைந்தன.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய சந்திரா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
காயமடைந்த முத்தாபாய், மீனா, ஜானகிராமன், காமாட்சி, ஹேமநாதன், சுரேஷ் ஆகியோரை மீட்டு ஆரணி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.
இவர்களில் காமாட்சியும் சிறுவன் ஹேமநாதனும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தனர்.
மற்ற நால்வரையும் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தீவிரச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் விபத்து நேர்ந்த வீட்டையும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டவர்களையும் பார்வையிட்டனர்.
மூவர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா 2 லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தோருக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், சாதாரணக் காயமடைந்தோருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Comments