சாலையில் விதிமீறலை அனுமதிக்க அபராதமா ?... கூடுதல் பாரம் விபரீதம்

0 2483

சென்னையில் ஆபத்தான வகையில் சரக்கு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட 20 அடி நீளமான இரும்பு கம்பிகள், மொத்தமாக சாலையில் விழுந்த நிலையில் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை சாமர்த்தியமாக நிறுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

சென்னையில் பகலில் வாகன நெரிசலில் மூச்சுத்திணறும் பல சாலைகள் இரவில் போக்குவரத்து போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்து விடுகின்றன. லாரிகள் தொடங்கி பாரம் ஏற்றிச்செல்லும் எந்த ஒவ்வொரு வாகனத்தையும் ஓரங்கட்டி வாகன ஓட்டுனரிடம் விரிவான சோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்கின்றனர்

ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக தினமும் ராட்சத பாறாங்கற்களை விதியை மீறி அளவுக்கதிகமாக ஏற்றிச்செல்லும் டாரஸ் லாரிகளை மறித்து நிறுத்தும் போலீசார் அவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்த பின்னர் அந்த ஆபத்தான கற்களை கீழே இறக்க அறிவுறுத்துவதில்லை, விதியை மீறி அப்படியே அந்த லாரிகள் சாலையில் செல்ல அனுமதிக்கின்றனர்.

எங்காவது ஒரு இடத்தில் இந்த பாறாங்கற்கள் லாரியில் இருந்து உருண்டு சாலையில் விழுந்தால் என்ன வாகும்? என்ற முன்னெச்சரிக்கையோ, வரும் முன் காக்கும் சிந்தனையோ சிறிதும் இல்லாமல் நடந்து கொள்வதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதே போல மணலி எம்.எப்.எல் சாலை சந்திப்பில் தினமும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் கடந்து செல்கின்றது. காவல்துறையினர் வாகன தணிக்கை செய்து அதிகபாரம் ஏற்றிச்செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்துவிட்டு மீண்டும் அந்த ஆபத்தான சரக்கு வாகனங்களை சாலையில் செல்ல அனுமதிக்கின்றனர்.

அந்தவகையில் வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான சரக்கு வாகனம் ஒன்றில் விதியை மீறி 20 அடிக்கும் நீளமான 2450 கிலோ எடையுள்ள இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு அதன் ஓட்டுனர் வாகனத்தை ஓட்டிச்சென்றார். பாரம் தாங்காமல் மாதவரம் சுங்கச்சாலையில் தடுமாறிச்சென்ற வாகனத்தின் குறுக்கே எறுமை மாடு ஒன்று புகுந்ததால், ஓட்டுனர் பிரேக் அடித்த வேகத்தில் அந்த சரக்கு வாகனத்தில் நீட்டிக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட இரும்பு கம்பிகள், மொத்தமாக சாலையில் பாய்ந்து விழுந்தன.

அந்த வாகனத்திற்கு பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் சாமர்த்தியமாக தங்கள் வாகனங்களை சட்டென்று நிறுத்தியதால் பெரும் விபத்துக்களின் உயிரிழப்புகளும் அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் அழகேசன் தலைமையிலான காவல்துறையினர் வழக்கம் போல வாகன ஓட்டுனரை எச்சரித்ததோடு, அவருக்கு 2500 ரூபாய் அபராதமாக விதித்தனர். சில வாகன ஓட்டிகள் விபரீத விபத்திற்கு காரணமான வாகனத்தை கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதால், அந்த சரக்கு வாகனத்தை கைப்பற்றிய போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்து சாலையில் கிடந்த இரும்புகம்பிகளை எல்லாம் வேக வேகமாக அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

விபத்து நடந்த பின்னர் வேகமாக நடவடிக்கை கொள்ளும் போக்குவரத்து காவல்துறையினர், முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் இது போன்ற விபரீத விபத்துக்களையும், அதன் மூலம் விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்க முடியும் என்பதே வாகன ஓட்டிகளின் ஆதங்கமாக இருக்கின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments