தீபாவளி: "தொடங்கியது கொண்டாட்டம்" கடைகளில் குவியும் கூட்டம்..!

0 2837
தீபாவளி: "தொடங்கியது கொண்டாட்டம்" கடைகளில் குவியும் கூட்டம்..!

நாளை தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில் பெருநகரங்களில் கடை வீதிகள் களைகட்டி வருகின்றன. மழை காரணமாக ஒருசில இடங்களில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. 

மதுரை: 

மதுரை விளக்குத்தூண், தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகள், பட்டாசுக் கடைகளில் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து குவிந்து வருவதால் சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை நிரம்பி வழிகின்றன. 

சேலம்:

சேலம் வ.உ.சி பூ மார்க்கெட் மற்றும் சின்னக்கடை வீதி, பழைய பேருந்து நிலையம், ராஜகணபதி கோவில் பகுதிகளில் துணிகள், ஆபரணங்கள், பட்டாசுகள், பூக்கள், நோன்பு கயிறு என வியாபாரம் களைகட்டியது. நெருக்கடிகளை சீர்செய்ய ஏராளமான போலீசார் முக்கிய பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாநகரில் அதிகாலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்ததால் வடக்குரத வீதி, வண்ணார்பேட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. மாலை மழை குறையும்பட்சத்தில் கூட்டம் அதிகரிக்கக் கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

திருச்சி:

திருச்சி மாநகர கடை வீதிகளில் தீபாவளி இறுதிக்கட்ட வியாபாரம் சூடு பிடித்துள்ளது. புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் சாரைசாரையாக சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, தெப்பக்குளம், நந்தி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குவிந்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த தினங்களில் கடைவீதிகளில் காணாமல் போன 35க்கும் மேற்பட்ட குழந்தைகள்  கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  

திருப்பூர்:

ஜவுளி மற்றும் நகைக்கடைகள் அதிகமுள்ள திருப்பூர் புதுமார்கெட் வீதியில் தீபாவளிப் பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். குமரன் சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் அமைத்து, மக்கள் கூட்டத்தை சீர்செய்யும் போலீசார், முகக்கவசம் அணியாமல் வரும் மக்களையும் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments