வங்கிக் கொள்ளை நகைகள் மீட்பு..! சிக்கிய ஊழியர்கள்

0 323

திருவள்ளூரில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகள் 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய வங்கி ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கிளை அமைந்துள்ளது. கட்டிடத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள இந்த வங்கிக் கிளையை மேலாளர் சேகர், சனி, ஞாயிறு விடுமுறைக்குப்பிறகு திறப்பதற்காக, ((நேற்று)) வந்துள்ளார். வங்கியின் கிரில் கேட் உடைக்கப்பட்டு, ஷட்டர் மற்றும் கதவு திறக்கப்பட்டு இருந்ததால் உடனடியாக திருவள்ளூர் போலீசாரிடம் மேலாளர் சேகர் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சிபி.சக்கரவர்த்தி தலைமையிலான போலீசார் ஆய்வு செய்ததில், பெட்டகங்களில் இருந்த அடகு வைத்த நகைகள் மட்டும் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. 624 பேர் அடகு வைத்திருந்த, 8 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ நகைகள் லாக்கரில் இருந்ததும், கள்ளச்சாவி மூலம் திறக்கப்பட்டு அவை மட்டுமே கொள்ளையடிக்கப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, டிஎஸ்பி புகழேந்தி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.வங்கி ஊழியர்கள் 8 பேரிடம் விசாரணை நடத்தியதில் வங்கி அலுவலக உதவியாளர் விசுவநாதன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை இரவில் வங்கியை திறந்து நகைகளை கொள்ளை அடித்து சென்றதாகவும் போலீசாரிடம் விசுவநாதன் கூறியுள்ளார். விசுவநாதனையும் அவருக்கு உதவியாக இருந்த மேலும் 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 32 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட 32 கிலோ நகைகள் வங்கியிடம் ஒப்படைக்கப்படும் என்றும், கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் எஸ்.பி. சிபி.சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். கொள்ளை அடிக்கப்பட்ட 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்து நகைகளை மீட்ட போலீசாரை வங்கி வாடிக்கையாளர்கள் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments