எஸ்.ஏ.சி.யின் அஇதவிமஇ தலைவர் தலைமறைவு... விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மீது புகார்

0 5643
எஸ்.ஏ.சி.யின் அஇதவிமஇ தலைவர் தலைமறைவு... விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் மீது புகார்

விஜய்யின் தந்தை எஸ்ஏசி தொடங்கியுள்ள அ.இ.த.வி.ம.இ. கட்சியின் மாநில தலைவர் திருச்சி ஆர்.கே.ராஜா எனும் பத்மநாபன் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு தலைமறைவாகியுள்ளார். விஜய் ரசிகர் மன்ற மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தூண்டுதலின் பேரில் போலீசார் தன்னை பொய் வழக்கில் தேடுவதாகவும், தன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து  ஏற்பட்டால் அதற்கு புஸ்ஸி ஆனந்து தான் காரணம் என்றும் ஆர்.கே.ராஜா கூறியுள்ளார். 

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியின் மாநில தலைவராக எஸ்.ஏ.சி.யால் நியமிக்கப்பட்டவர் திருச்சியை சேர்ந்த ஆர்.கே.ராஜா எனும் பத்மநாபன். எஸ்.ஏ.சி. கட்சி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, தனது ரசிகர்கள் யாரும் தந்தை தொடங்கிய கட்சியில் இணைய வேண்டாம், தனக்கும் கட்சிக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லை என விஜய் அறிக்கை வெளியிடவே, கட்சியில் பிளவு ஏற்பட்டது.

பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜய்யின் தாயார் ஷோபாவும் கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இந்த சூழலில், தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என பெயரை மாற்றி, பதிவெண் இல்லாத லெட்டர் பேடு தயாரித்து, புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்து வருவதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், எஸ்.ஏ.சி. தொடங்கிய அ.இ.த.வி.ம.இ. கட்சிக்கு மாநில தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.கே.ராஜா எனும் பத்மநாபன், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்டு, தலைமறைவாகியுள்ளார். நேற்றில் இருந்து பொய் வழக்கில் திருச்சி போலீசார் தன்னை தேடுவதாகவும், தன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரையும் போலீசார் தொந்தரவு செய்வதாக ஆர்.கே.ராஜா கூறியுள்ளார்.

நடிகர் விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த்தின் தூண்டுதலின் பேரில் தான், தன்னை போலீசார் தொந்தரவு செய்வதாகவும், உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதற்கு முழுக்க முழுக்க புஸ்ஸி ஆனந்து தான் காரணம் என்றும் ஆர்.கே. ராஜா வீடியோவில் கூறியுள்ளார்.

இதனிடையே ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஆர்.கே.ராஜா மண்ணச்சநல்லூர் அருகே விற்பனை செய்த நிலத்தில் மோசடி செய்துவிட்டதாக ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அவரை தேடி வருவதாக திருச்சி போலீசார் கூறியுள்ளனர்.

அதே சமயம் ஆர்.கே.ராஜாவின் மனைவி மற்றும் மாமனாரை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்து தரப்பினர் கொடுத்த பொய் புகாரின் அடிப்படையில் தன்னை போலீசார் துரத்துவதாக ஆர்.கே.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதனிடையே, ஆர்.கே.ராஜாவுக்கு நடக்கும் பிரச்சனைகள் எதுவும் விஜய்க்கு தெரியாது என நம்புவதாகவும், இந்த விவகாரத்தில் நடிகர் விஜய் விரைவில் தலையிட்டு சமரசமாக பேசி பிரச்சனையை முடிக்க வேண்டும் என ஆர்.கே.ராஜா வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சுமார் 25 ஆண்டுகளாக விஜய்யின் ரசிகர் மன்றத்தில் இருந்து உழைத்த ஆர்.கே ராஜா, மனைவி, மாமானார் உட்பட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்துவது எஸ்.ஏ.சி. யிடம் விசாரணை நடத்துவதற்கு சமம் என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments