களைகட்டிய உளுந்தூர்பேட்டை ஆட்டுச்சந்தை... 3 மணி நேரத்தில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

0 6929
உளுந்தூர்பேட்டை சந்தை

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில்,  உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளன. எதிர்பார்த்ததை விடவும் அதிக விலைக்கு ஆடுகள் விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் புதன்கிழமையன்று வாரசந்தை நடப்பது வழக்கம். அப்போது காலை 7 மணி முதல் 10 மணி வரை ஆட்டுச் சந்தை நடைபெறும். தமிழகத்தில் பிரதானமாக விளங்கும் ஆட்டு சந்தைகளில் உளுந்தூர்பேட்டை சந்தையும் ஒன்று. வரும் சனிக்கிழமையன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திருவெண்ணை நல்லூர், திருக்கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் ஆடுகளை உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

ஒரு ஆட்டின் விலை ரூ.7,000 முதல் ரூ.12,000 வரை விற்பனையான நிலையில் சுமார் நான்காயிரம் ஆடுகள் சுமார் மூன்று மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தன. இதனால், உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் 3 மணி நேரத்தில் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு ஆடுகள் விற்பனையாகின. வழக்கமாக ரூபாய் ரூ. 5,000  முதல் ரூ.7,000 வரை ஆடுகள் விற்பனையாகி வந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் ரூ. 7000 முதல் 12000 வரை விற்பனையாகியுள்ளன. ஆடுகளுக்கு விலை கூடுதலாகக் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளியன்று இறைச்சி அதிகளவில் விற்பனை செய்யப்படும், அதையொட்டி உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தைக்கு அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும் வியாபாரிகளும் குவிந்ததால் ஆட்டுச் சந்தை களைகட்டியது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments