டைட்டானிக் பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..! மணமக்கள் மூழ்கி பலி

0 78044
டைட்டானிக் பாணியில்.. படகு முனையில் நின்று வெட்டிங் ஷூட் விபரீதம்..! மணமக்கள் மூழ்கி பலி

காவிரி ஆற்றில் படகில் அமர்ந்து திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் செய்த போது படகு கவிழ்ந்ததால் மணமகனும், மணமகளும் நீரில் மூழ்கி பலியாயினர். வெட்டிங் போட்டோ சூட் என்ற பெயரில் போட்டோ கிராபர்கள் நடத்தும் விபரீத விளையாட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

முன்பெல்லாம் திருமணம் முடிந்த பின்னர் தான் மணமகனும், மணமகளும் சேர்ந்து வெளியிடங்களுக்கு சென்று போட்டோ சூட் எடுத்துக் கொள்வார்கள். தற்போது திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தாலே தங்களை ஒளி ஓவியர்களாக காட்டிக் கொள்ளும் போட்டோ கிராபர்களிடம் சிக்கி அந்த மணமகனும் மணமகளும் படும் பாடு இருக்கின்றதே சொல்லி மாளாது

அந்தவகையில் கேரளாவில் உள்ள மணமக்களை வைத்து ஒளி ஓவியர்கள் செய்யும் போட்டோ சூட் எல்லாமே எல்லை மீறியதாக இருக்கும்..! அப்படி ஒருமுறை படகில் அமரவைத்து தண்ணீர் ஊற்றுவதாக நினைத்து மணமக்கள் அமர்ந்திருந்த படகை கவிழ்த்து பால் ஊற்ற முயன்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது

தண்ணீர் அளவு குறைவாக இருந்ததால் அந்த தம்பதிகள் உயிர் பிழைத்தனர். அதே பாணியில் கடுமையான ஆழம் நிறைந்த காவிரிஆற்றில் திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் நடத்திய விபரீத போட்டோ கிராபரின் கேமரா ஆங்கிள் மாறியதால் படகு கவிழ்ந்து மணமக்கள் இருவரும் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறி உள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த முதுக்குத்தூரை சேர்ந்த சந்துரு மற்றும் சசிகலாவுக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வருகிற 22 ந்தேதி திருமணம் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில் திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட் செய்வதற்காக மணமக்களை அழைத்துக் கொண்டு காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு படகில் சென்றுள்ளனர் படப்பிடிப்பு குழுவினர்.

புகைப்பட கலைஞர் ஒரு படகிலும், மணமக்கள் மற்றொரு படகிலும் அமர்ந்திருந்துள்ளனர். ஹாலிவுட்டின் டைட்டானிக் ஜோடியை போல இருவரையும் கையை நீட்டிக் கொண்டு படகின் முனையில் நிற்கவைத்து படமெடுப்பதற்கு திட்டமிட்ட போட்டோ கிராபர், படகின் ஒருமுனையில் மணமக்களும் மறுமுனையில் படகோட்டியையும் நிற்கவைத்துள்ளார். அப்போது முன்பக்க பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் மணமகன் சந்துருவும், மணமகள் சசிகலாவும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்

படகோட்டி நீந்தி கரைக்கு வந்ததால் உயிர் தப்பினார். புகைப்பட குழுவில் எவருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் மணமக்களை காப்பாற்ற இயலவில்லை என்று கூறப்படுகின்றது. பின்னர் பரிசலில் சென்று நீரில் மூழ்கிய இருவரது சடலங்களையும் காவல்துறையினர் மீட்டு வந்தனர்

திருமண புகைப்படம் என்பது ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வின் பொக்கிஷம் போன்றது, அதற்காக அதீத கற்பனை திறனை காட்டுவதாக நினைத்து எந்த வித பாதுகாப்பு முன்னேற்பாடும் இன்றி நடு ஆற்றில் படப்பிடிப்பு நடத்திய வில்லங்க போட்டோகிராபரால் இந்த விபரீத உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுவாக வெட்டிங் சூட் பாதுகாப்பானதுதான், பிரமிக்க வைப்பதாக கூறி ஒளி ஓவியர்கள் வெளியிடங்களுக்கு அழைத்துச்சென்று மேற்கொள்ளும் முயற்சிகள் விபரீதமாகி விடுகின்றது என்பதற்கு இந்த சம்பவமும் சாட்சியாகி இருக்கின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments