பீகாரில் 3 கட்ட தேர்தல்.! வரலாறு பேசும் பீகார்., இனி யார் வசம்..?

0 1597

ரலாற்று சிறப்புமிக்க பெருமைகளை கொண்ட பீகார் மாநிலத்தில், மூன்று கட்டங்களாக, சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

பண்டைய கால வரலாற்று பெருமைகளை கொண்ட பீகார், இன்றளவும், அப்படியே இருக்கிறதா? அல்லது சறுக்கல்களை சந்தித்திருக்கிறதா? என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

இந்தியாவின் நீண்ட நெடிய பண்டைய கால வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மாநிலம் பீகார்.... கல்வி, அரசியல், இராணுவம், பொருளாதாரம், கலாச்சார பண்பாட்டு மையமாக, சுமார் ஆயிரம் ஆண்டுகள் கோலோச்சிய ஊர், பீகார்... அதன் தற்போதைய தலைநகரான பாட்னாவின் பண்டைய காலப் பெயர், படாலிபுத்திரம்.

வரலாற்று பக்கங்களில் முக்கிய இடம் பெற்றுள்ள படாலிபுத்திரத்தை தலைநகராக கொண்டு, மகத நாட்டு அரசர்களான, மெளரிய மற்றும் குப்த பேரரசர்கள், பெரும் நிலப்பரப்பை ஆண்டனர்.அலெக்சாண்டரின் தளபதியான செலுக்கஸ்நிகோடரை தோற்கடித்த சந்திர குப்த மௌரியரின் தலைநகரமும் பாடலி புத்திரம் தான்.

மகா அசோகர் என்று வரலாறு புகழ்ந்து கொண்டாடும் மாமன்னர் இந்தியாவின் பெரும் பரப்பை ஆண்டதும் பாடலிபுத்திரத்தில் இருந்து தான்.இந்தியாவின் நெப்போலியன் என்று வரலாறு போற்றும் சமுத்திரகுப்தன் ஆண்டதும் பீகாரில் தான்

கெளதம புத்தர் தோற்றுவித்த புத்த மதமும், மகாவீரர் தோற்றுவித்த சமண மதமும், தோன்றிய முக்கிய இடம், பீகார். இன்றும், புத்த பிக்குகளின் புனித கேந்திரமாக புத்த கயாவும், மகாபோதி கோவில் உள்ளிட்டவை விளங்குகின்றன.

நான்கு புறமும், நிலப்பரப்பையே எல்லைகளாக கொண்டுள்ள பீகார், பண்டைய காலத்தில், கல்வியில் சிறந்து விளங்கியுள்ளது. பாட்னா அருகே, ராஜ்கிர் பகுதியில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம் பண்டைய வரலாற்று பெருமை வாய்ந்த ஒன்றாகும்.

சுமார் 800 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2014ல் நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, இயங்கத் தொடங்கியுள்ளது. இப்படி, கல்வியில் பண்டைய காலங்களில் சாதனை படைத்த பீகார், தற்போது, மிகவும் பின்தங்கியிருக்கிறது என்பது எதார்த்தம்.

பீகார் மாநிலம் நிர்வாக வசதிக்காக ஒன்பது கோட்டங்களாகவும், முப்பத்து எட்டு வருவாய் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பீகாரின் மொத்த மக்கள் தொகை, 10 கோடியே 41 லட்சமாக உள்ளது. நகரங்களில் 12 சதவிகித மக்களும், கிராமப்புறங்களில் 87 விழுக்காடு மக்களும் வசிக்கின்றனர். 

கங்கை ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளும் பாயும் கங்கைச் சமவெளியில், பீகார் அமைந்துள்ளதால், இம்மாநிலத்தில், வேளாண்மைத் தொழில் சிறப்பாக உள்ளது. 

243 இடங்களை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இனி யார் வசம் என்பதை, 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சொல்லும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments