மனஉளைச்சலை போக்க மற்றவர்களுக்கு மன உளைச்சல்!- பைக்ரேசர்களை பஞ்சராக்கிய போலீஸ்

0 24445

கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முட்டுக்காடு பகுதியில் அதிவேகமாக சென்ற பைக் ரேசர்களிடத்திலிருந்து 17 விலை உயர்ந்த ரேஸ் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரி வரை பைக் ரேசர்கள் அதிவேகமாக செல்வது வாடிக்கையாக உள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் அசட்டையாகவும், முரட்டுத்தனமாக பைக்கில் செல்வதால், கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும், இத்தகைய ரேஸ்களில் ஈடுபடுவது பணக்காரர்களே. பெரும்பாலும், இள வயது தொழிலதிபர்கள் முதல் மூத்த தொழிலதிபர்கள் வரை, இப்படி ரேஸ்களில் ஈடுபடுட்டு மற்றவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தனர். கேட்டால், வாரத்துக்கு ஒரு முறை இப்படி சென்று வருவது தங்களின் மன உளைச்சலை போக்குவதாகவும் தங்களால் ஒரு போதும் விபத்துகள் ஏற்பட்டதில்லை என்றும் காரணங்கள் கூறுகின்றனர். இப்படி, மனஉளைச்சலை போக்க ஈசி.ஆர். ரோட்டில் தாறுமாறான ஸ்பீடில் சென்று கொண்டிருந்த தொழிலதிபர்களுக்கு போலீஸார் கூடுதல் மனஉளைச்சலை கொடுத்து விட்டனர் என்பதுதான் காமெடியின் உச்சக்கட்டமாக அமைந்து விட்டது.

கோவளம் டி.எஸ்.பி உத்தரவையடுத்து, கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் போலீசார் கோவளம் அருகேயுள்ள, முட்டுக்காடு பாலத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, விலை உயர்ந்த பைக்குகளில் சுமார் 30- க்கும் மேற்பட்டவர்கள் சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தனர். அப்படி சென்றவர்களை கேளம்பாக்கம் போலீசார் அதிரடியாக மடக்கி பிடித்து பைக்குகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்களில் பி.எம். டபிள்யூ பைக்குகளும் உள்ளன. பி.எம்.டபிள்யூ பைக்கில் ஏ.சி. , கேமரா போன்ற அதிநவீன வசதிகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. விசாரணையில் பிடிபட்டவர்கள் அத்தனை பேரும் தொழிலதிபர்கள் மற்றும் வருங்கால தொழிலதிபர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அதிவேகமாக சென்றதாகவும் அடுத்தவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக வாகனம் ஓட்டியதாகவும் பைக் ரேசர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈ.சி.ஆர் பகுதி போலீஸார் பைக் ரேசர்கள் மீது போலீஸார் இந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வது இதுவே முதன்முறை . இதனால், பைக்குகளை பறி கொடுத்த தொழிலதிபர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே, போலீஸாருக்கும் பல இடங்களில் இருந்து நெருக்கடி வந்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து, அபராதம் விதித்து தொழிலதிபர்களை போலீஸார் விடுவித்தனர். பிறகு, தங்கள் பைக்குகளில் ஆமை வேகத்தில் அங்கிருந்து தொழிலதிபர்கள் எஸ்கேப் ஆனார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments