நெருங்கும் தீபாவளி பண்டிகை...களைகட்டும் கடைவீதிகள்!

0 2365
நெருங்கும் தீபாவளி பண்டிகை...களைகட்டும் கடைவீதிகள்!

தீபாவளி பண்டிகையை ஒட்டி, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் புத்தாடைகள், பலசரக்கு பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

வணிக நிறுவனங்கள், கடைகள் மிகுந்து காணப்படும் சென்னை தியாகராய நகரிலுள்ள ரங்கநாதன் தெருவில் பொதுமக்கள் ஆர்வமுடன் புத்தாடைகள் வாங்கி செல்கின்றனர். கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து, தொலைநோக்கி உதவியுடன் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மப்டியிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், அவ்வப்போது ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டும் கண்காணித்து வருகின்றனர்.

மொத்த விற்பனை கடைகள் அதிகமுள்ள வண்ணாரப்பேட்டை எம்.சி.சாலையில், விடுமுறை நாளான இன்று ஏராளாமானோர் குடும்பத்துடன் வந்து புத்தாடைகள், நகைகள், பல சரக்கு பொருட்கள் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாமல் சிக்கி கொண்ட சூழல் உருவானது.

மதுரையில் தெற்கு மாசி வீதி, கீழமாசி வீதி, காமராஜர் சாலை, விளக்குத் தூண் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

திருச்சியில் வணிக நிறுவனங்கள் அதிகமுள்ள என்.எஸ்.பி. ரோடு, பெரிய கடை வீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளாமானோர் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். ஆங்காங்கே NO MASK NO ENTRY என்ற வாசகம் அடங்கிய டிஜிட்டல் பலகைகளும் பொருத்தப்பட்டுள்ளன.

சேலம் சின்ன கடை வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் திரளானோர் வந்து ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், நகைகள் ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.

தஞ்சையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி, பட்டாசு, வீட்டு உபயோக பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. சாலையோர கடைகளில் குறைந்த விலையில் துணிமணிகள் விற்பனை செய்யப்படுவதால், அங்கு பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டினர்.

திருப்பூர் புதுமார்கெட் வீதியில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. குமரன் சாலை, காமராஜர் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

தென்காசியில் குடும்பத்துடன் வந்து தீபாவளிக்கு தேவையான பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர். கொரோனாவால் வருவாய் இழந்த சாலையோர வியாபாரிகள், தற்போது பண்டிகை கால விற்பனையில் சூடுபிடித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments