பழமையான பயன்பாட்டுப் பொருட்கள்.. வியக்கவைக்கும் புதுச்சேரிக்காரரின் உழைப்பு

0 2828
பழமையான பயன்பாட்டுப் பொருட்கள்.. வியக்கவைக்கும் புதுச்சேரிக்காரரின் உழைப்பு

நம் முன்னோர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, தற்போது வழக்கொழிந்துவிட்ட அரிய பொருள்களைத் தேடித் தேடிச் சேகரித்து பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார், புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவர். 

நம் குரல் கட்டளையைக் கேட்டு வேலை செய்யும் இயந்திரங்கள் பெருகிவிட்ட காலகட்டத்தில், வழக்கொழிந்துபோன தமிழர்களின் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை ஆயிரக்கணக்கில் சேகரித்து வைத்திருக்கிறார் ஐயனார். புதுச்சேரி, சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியை சார்ந்த ஐயனார், மாநில அரசின் சுகாதாரத்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழகம் முழுக்க அலைந்து திரிந்து, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்களைச் சேகரித்து பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 25 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார் ஐயனார்.

அவரிடம் இருக்கும் 1,000-க்கும் மேற்பட்ட பழைமையான கலைப் பொருள்கள் 50 ஆண்டுகளில் இருந்து 100 ஆண்டுகளைக் கடந்தவை என்று கூறப்படுகிறது. லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவற்றை வாங்கி தனது வீட்டில் ஒரு பகுதியை ஒதுக்கி பாதுகாத்து வருகிறார்.

முன்னோர்களின் வாழ்வியல் முறையை தற்போதைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே தனது நோக்கம் என்கிறார் ஐயனார்.

பித்தளை மற்றும் செம்பால் செய்யப்பட்ட டம்ளர்கள், கூஜாக்கள், பித்தளைத் தட்டுகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பாக்கு வெட்டிகள், தண்ணீர் குடிக்கும் சொம்புகள், குடுவைகள், தூக்குகள், வாளிகள், உணவருந்தும் கரண்டிகள், டீ பாய்லர்கள், வெற்றிலை இடிக்கும் உரல், வெண்கலப் பேழைகள், பித்தளை தேங்காய் துருவம் கருவி, ராமர் விளக்கு, பித்தளை நாடா விளக்கு, குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்கள், தூபக்கால் என அடுக்கி வைத்திருக்கும் பொருட்கள் கூறுகின்றன ஐயனாரின் வியக்கவைக்கும் உழைப்பை.
 
பள்ளி மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்படும் விதமாக தாம் சேகரித்து வைத்திருக்கும் பொருட்களை வைத்து அருங்காட்சியகம் உருவாக்க வேண்டும் என்பதுதான் தனது ஆசை என்கிறார் ஐயனார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments