ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

ஒடிசா மற்றும் ராஜஸ்தானில் தீபாவளி சீசனில் பட்டாசுகளை விற்பதற்கும் வெடிப்பதற்கும் விதிக்கப்பட்ட தடையை மறுபரிசீலனை செய்யுமாறு அம்மாநில முதலமைச்சர்களை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கும், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் காலை 1 மணி நேரமும் மாலை 1 மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒட்டுமொத்த பட்டாசு தயாரிப்பில் தமிழகத்தின் பங்கு 90 சதவீதம் என்றும், இதன் மூலம் நேரடியாக 4 லட்சம் பேருக்கும் மறைமுகமாக 4 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவர்களது வாழ்வாதாரம் தீபாவளி சீசனில் வெடிக்கப்படும் பட்டாசுகளை சார்ந்துள்ளது என்றும், ஒடிசாவிலும் ராஜஸ்தானிலும் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடை, நேரடியாக 4 லட்சம் பேர் வாழ்விலும், பட்டாசு விற்பனையில் ஈடுபட்டுள்ள மேலும் 4 லட்சம் பேர் வாழ்விலும் நேரடியான பாதிப்பை ஏற்படுத்தும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் அரசுகள் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை போட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பிரதானமாக பசுமைப் பட்டாசுகளையே தயாரிக்கிறது என்றும், அதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற பிரச்சனைக்கே இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் #CMEdappadiPalaniswami | #AshokGehlot | #NaveenPatnaik | #Crackers https://t.co/qRcNHFEvxI
— Polimer News (@polimernews) November 5, 2020
Comments