அருகில் சென்றால் காட்டுப்பன்றிக்கு பதிலாக குட்டி யானை! - தப்பிய வேட்டைக்காரனுக்கு காப்பு

0 15069

ஓசூர் அருகே வனப்பகுதியில் காட்டுப்பன்றி என்று கருதி குட்டியானையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வேட்டைக்காரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஓசூர் அருகே ஜவளகிரி வனப்பகுதிக்குட்பட்ட சென்னமாலம் பகுதியில் சுமார் 8 வயது மதிக்கத்தக்க பெண் குட்டியானை உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட தளி வனத்துறையினர் உயிரிழந்த குட்டியானையை கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது குட்டியானை குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து, தளி வனத்துறையினர் வன உயிரின குற்றவழக்கு செய்து தீவிரமாக புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள சென்னமாலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துமல்லேஷ் (40) என்பவன் குட்டியானையை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவனை கைது செய்த வனத்துறையினர் அவனிடத்திலிருந்து நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

முத்து மல்லேஷ் அடிக்கடி காட்டுக்குள் சென்று காட்டுப்பன்றிகளை வேட்டையாடி வந்துள்ளான். இரவில், வேட்டைக்கு சென்ற சமயத்தில் காட்டுப்பன்றி என்று நினைத்து குட்டி யானையை சுட்டுள்ளான். பின்னர், அருகில் சென்று பார்த்த போது காட்டுப்பன்றிக்கு பதிலாக குட்டி யானை இறந்து கிடந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த முத்து மல்லேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். குட்டி யானையை கொன்ற முத்து மல்லேஷ் இப்போது, கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments