அலர்ட் ஆறுமுகம் அகப்பட்டது எப்படி ? அதிர்ந்த அதிகாரிகள்..!

0 11731
அலர்ட் ஆறுமுகம் அகப்பட்டது எப்படி ? அதிர்ந்த அதிகாரிகள்..!

சென்னை கொடுங்கையூரில் மாநகராட்சி வார்டு அலுவலகத்திற்குள் நுழைந்து 10 சேர்கள் மற்றும் 2 கம்யூட்டர்களை திருடிச்சென்ற எதிர் வீட்டுக்காரரை சிசிடிவி காட்சிகளின் மூலம் அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். அலுவலகம் பூட்டப்படாமல் திறந்து போடப்பட்டதால் எச்சரிப்பதற்காக திருடிய அலர்ட் ஆறுமுகம் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணமூர்த்தி சாலை பகுதியில் 35 வது வார்டு மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் உதவி பொறியாளராக பிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வருகின்றார்.

இவர் உள்ளிட்ட இங்கு பணிபுரியும் அனைவரும் பணிமுடிந்து வீட்டிற்கு செல்லும் போது அலுவலகத்தை பூட்டாமல் திறந்தபடியே விட்டுச்செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவும் பணி முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்ற போதும் அலுவலக கதவை பூட்டாமல் சென்றதாக கூறப்படுகின்றது.

புதன்கிழமை காலை காவலாளி வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த 10 சேர்கள் மற்றும் இரண்டு கம்ப்யூட்டர்கள் திருடு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

திருட்டு சம்பவம் குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுகொண்ட போலீசார் வழக்குபதிவு செய்து மாநகராட்சி கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சம்பவத்தன்று இரவு எதிர் வீட்டில் வசிக்கின்ற ஆறுமுகம் என்கிற அலர்ட் ஆறுமுகம் என்பவர், நள்ளிரவு நேரத்தில் திறந்து கிடந்த மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து சேர்கள் மற்றும் கம்யூட்டர்களை ஒவ்வொன்றாக அலேக்காக தூக்கிச்சென்றதோடு, சிசிடிவி காமிராவின் முன்பு நின்று ஏதோ சைகை காட்டிச்சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து கொடுங்கையூர் போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டாமலே மெத்தனமாக செல்கின்றனர் எத்தனையோ தடவை கூறியும் அதைப்பற்றி கவலையே இல்லாமல் அலுவலகத்தை திறந்து போட்டு சென்றனர்

அவர்களுக்கு பாடம் கற்றுத்தர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் சிசிடிவி காமிரா முன்பு நின்று சவால் விட்டு அவற்றை திருடிச்சென்று தனது வீட்டில் பத்திரமாக வைத்திருப்பதாக கூறிய அலர்ட் ஆறுமுகம், திருடிய பொருட்களை எல்லாம் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அவர் என்ன தான் எச்சரிக்கை செய்வதற்காக திருடியதாக கூறினாலும், அரசு அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு பொருளை எடுத்துச்சென்றாலும் அது திருட்டாகவே கருதப்படும் என்பதால் அலர்ட் ஆறுமுகத்தை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

திருட்டு நடந்து விடக்கூடாது என்பதற்காக , மாநகராட்சி அதிகாரிகளை அலர்ட் செய்த ஆறுமுகத்திற்கு அரசு அலுவலக பொருட்களை வீட்டுக்கு எடுத்துச்சென்றால் திருட்டு வழக்கு போட்டு, கையில் காப்பு மாட்டி, புழல் சிறையில் அடைத்து விடுவார்கள் என்று அலர்ட் கொடுக்க ஆளில்லாமல் போனது தான் சோகம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments