சிம்பு பாம்பு வம்பு..! முடியலைப்பா... முடியல..!

0 16662
சிம்பு பாம்பு வம்பு..! முடியலைப்பா... முடியல..!

சினிமாவில் பாம்புகளை வைத்து காட்சிப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய்யை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படத்திற்கு சிக்கல் உருவாகியுள்ளது. சிம்பு பாம்பு பிடித்ததால் உருவான வம்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.. 

ரஜினி முருகன் படத்தில் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பை நடிகர் சிவகார்த்திகேயன் தைரியமாக பிடித்து தூக்குவது போன்ற காட்சி ஒன்றை மரக்கடையை வைத்து படமாக்கி கிராபிக்ஸ் மூலம் அதில் பாம்பை ஒட்டவைத்தனர்.

பாம்பை காட்சிப் படுத்துவதற்கு முன்னதாக விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் என்பதால் அந்த காட்சியையே படத்தில் இருந்து அகற்றினர்.

அதே போல விஜய்யின் மெர்சல் படத்தில் மேஜிக் கலைஞரான விஜய் மந்திர சக்தியால் பாம்பாக மாறுவது போல கிராபிக்ஸில் உருவாக்கிய நிலையில், அதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் உருவாகி நாட்கணக்கில் காத்திருக்கும் நிலை உருவானதால் அந்த கிராபிக்ஸ் காட்சியையே வெட்டி வீசி படத்தை வெளியிட்டனர்

இந்த நிலையில் ஈஸ்வரன் படத்திற்காக அசல் பாம்புடன் சிம்பு கெத்தாகத் தோன்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

சிலர் கிராபிக்ஸ் பாம்பு என கமெண்ட அடிக்க , சிம்புவின் வீரத்தை மெய்ப்பிக்கும் விதமாக அவர் பிடித்தது அசல் பாம்பு என்பதை ஊராருக்கு காட்டுவதற்காக, சிம்பு மரக்கிளையில் இருந்து உயிருள்ள பாம்பை எடுத்து சாக்குப்பையில் போடும் காட்சியின் வீடியோவை ஈஸ்வரன் படக்குழுவினர் வெளியிட்டனர்

இந்த படத்திற்கு என்று பாம்புவை வைத்து படப்பிடிப்பு நடத்த விலங்குகள் நலவாரியத்திடம் முன்அனுமதி பெறாத நிலையில், இந்த வீடியோவை ஆதாரமாக வைத்து ஈஸ்வரன் படத்தில், நாகப்பாம்பை சட்டவிரோதமாக காட்சிப்படுத்தியதாகவும் பாம்பின் வாய் தைத்து துன்புறுத்தப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி ஆன் லைன் மூலமாக புகார் ஒன்றை விலங்குகள் நலவாரியத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

தற்போதைக்கு விலங்குகள் நலவாரியம் சத்தமின்றி இருந்தாலும், பட வெளியீட்டு நேரத்தில் சிம்புவின் படத்திற்கு வம்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகின்றது. ரஜினி முருகன், மெர்சல் போல பாம்பு காட்சியை வெட்டி வீசப்போகிறார்களா ?

அல்லது சிம்பு துணிச்சலாக பாம்புடன் நடித்த காட்சியை படத்தில் சேர்க்க விலங்குகள் நலவாரியத்தின் அனுமதிக்காக காத்திருக்கப் போகிறார்களா ? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

அதே நேரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போதுதான், சிம்பு ஈஸ்வரான்னு தனது பழைய வழியில் பரபரப்பாக படப்பிடிப்புகளுக்கு சென்று வர தொடங்கினார்.

அதற்குள் சிம்புவுக்கு பாம்பால் வம்பு வந்திருக்கின்றது என்கின்றனர் திரையுலகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments