ஒரே நாளில் இருவர் தற்கொலை.. தொடர் பலிகள் வாங்கும் ஆன்லைன் ரம்மி..!

0 2665

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், அந்த விளையாட்டால் கோவையில் மேலும் இரண்டு தற்கொலைகள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொண்டாமுத்தூர் பார்பர் காலனியைச் சேர்ந்த ஜீவானந்தத்துக்கு திருமணமாகி ஐந்து வயது மகன் இருக்கிறான். 

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கிய ஜீவானந்தத்தை பலமுறை கண்டித்தும் கேட்காததால், அவரது மனைவி சுகன்யா தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தாயாரின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் தனியாக இருந்த ஜீவானந்தம் தனது தொழில் பங்குதாரர்களுக்கு கொடுக்க வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடி மொத்தமாக இழந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆத்திரத்தில் தனது மொபைலை உடைத்துவிட்டு வீட்டின் அறைக்குள் சென்ற ஜீவானந்தம், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

மாச்சாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற 32 வயதான இளைஞர் சிஎன்சி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். பெற்றோரை இழந்து உறவினர் வீட்டில் தனியாக வசித்து வந்த ஜெயச்சந்திரனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

திருமணமாகாமல் தனிமையில் வசித்து வந்த இவர், பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஆதார், பேன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து ஆன்லைன் மூலம் கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். அதனால் அவரது மாத வருமானத்தில் இருந்து இசிஎஸ் முறையில் பணம் பிடித்தம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. அடுத்தடுத்து ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து, ஒரு கட்டத்தில் வருமானத்துக்கும் மேல் கடன் அதிகரித்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெயசந்திரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடுத்தடுத்து தற்கொலைகள் அரங்கேறி வருவதைத் தொடர்ந்து அதனை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதிரடி உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

இந்த இடைவெளியில் மேலும் இரண்டு தற்கொலைகள் அரங்கேறியுள்ளது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு விவகாரத்தில் அரசு உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments