ஆன்லைன் ரம்மி தடை விவகாரம்.. அரசு மீது நம்பிக்கை உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

0 2254
ஆன்லைன் ரம்மி - உயர்நீதிமன்றம் கேள்வி

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்த நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், (( GFX IN )) ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்றும் எனவே தமிழ்நாட்டில் அதனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட விளையாட்டில் வெற்றி பெற இயலாது என்பதை உணராமல் பலரும் அடிமையாகி வாழ்க்கையை இழந்து வருகின்றனர் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒன்றல்ல, இரண்டல்ல இதுவரை 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என நீதிபதிகள் கூறினர். தெலுங்கானா அரசு பணம் வைத்து விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுக்களையும் தடை செய்து, மீறுபவர்கள் மீது குண்டாஸ் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாயும் என அறிவித்துள்ளது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அதனைத் தொடர்ந்து இந்த பிரச்சனையை தீவிரமாக அலசி ஆராய்ந்து வருவதாகவும் எனவே அதுகுறித்து பதிலளிக்க 10 நாள் அவகாசம் வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், ஜூலை மாதம் இது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக சட்ட வரைவு ஏதேனும் உள்ளதா என்றும் ஆன்லைன் ரம்மியில் வரும் வருமானம் யாரைச் சென்றடைகிறது என்றும் கேள்விகளை அடுக்கினர்.

அதற்கு, சட்டப்பூர்வமாகவே நடத்தப்படும் ஆன்லைன் ரம்மியில் இந்திய அளவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குகிறது என்றும் விளையாடும்போது அவர்களுக்கு ஒருசில கட்டங்களில் எச்சரிக்கையும் வழங்கப்படுகிறது என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 10 நாட்களில் அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் அரசு உரிய முடிவெடுக்கும் என நீதிமன்றம் நம்புவதாக தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள், பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments