மீண்டும் நிதிஷ்குமார் ஆட்சி - பிரதமர் மோடி நம்பிக்கை

0 2102
பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் - பிரதமர் மோடி நம்பிக்கை

பீகாரில் முதற்கட்ட வாக்குப் பதிவுக்குப் பிந்தைய போக்குகள், நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்பதைக் காட்டுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

பீகார் சட்டமன்றத் தேர்தலையொட்டி சாப்ராவில் நடைபெற்ற பாஜக பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, பீகார் அரசு இரட்டை எஞ்சின்களைக் கொண்டு வளர்ச்சியை நோக்கிச் செல்வதாகக் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் இளவரசர்கள் இருவர் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று தோற்றதாகவும், அதேபோல் பீகாரிலும் இளவரசர்கள் இருவர் ஆட்சியைக் கைப்பற்ற முயல்வதாகவும் ராகுல்காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோரைப் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக சாடினார்.

மக்கள் பசியோடு இரவு உறங்கும்படி விட மாட்டோம் என்றும், ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டதாகவும், அது சாத் பூஜை வரைக்கும் தொடரும் என்றும் மோடி குறிப்பிட்டார்.

பீகாரில் கங்கை, கோசி உள்ளிட்ட ஆறுகளில் பாலங்கள் கட்டியுள்ளதையும், மின்சாரம், தண்ணீர், சாலை இணைப்பு வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதையும் தெரிவித்தார். இரண்டாயிரத்து ஐந்நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ரயில்வே திட்டங்கள் பீகாரில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார்.

சமஸ்டிப்பூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, பீகாரில் ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை அமைக்க உள்ளதாகவும், வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாயில் நிதியம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மோதிகாரியில் நடைபெற்ற பேரணியில் பேசிய மோடி, ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி ஏழைகள் நலனுக்காக ஒருபோதும் பாடுபடவில்லை என்றும், ஏழைகளுக்கான திட்டங்களில் ஊழல் செய்து பணம் சம்பாதித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

லாந்தர் விளக்கை மீண்டும் கொண்டுவர அவர்கள் முயல்வதாகவும், வீடுகளில் எல்இடி பல்புகளை ஒளிரச் செய்யத் தாங்கள் எண்ணியுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். நக்சல் ஆதரவாளர்களும், நாட்டைத் துண்டாட நினைப்பவர்களும் பீகாரில் மீண்டும் காட்டாட்சியைக் கொண்டுவர நினைப்பதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments