ஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எதிர்பார்ப்பு.....!

0 3249
ஆன்லைன் ரம்மி பயங்கரம் தொடரும் தற்கொலைகள் தடை வருமா என எதிர்பார்ப்பு.....!

கோவையைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் ஆன்லைன் ரம்மியில் ஏராளமான பணத்தை இழந்து கடனாளியாகி மன உளைச்சல் ஏற்பட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த 10 நாட்களில் மட்டும் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் அண்மையில் ஆன்லைனில் ரம்மி விளையாடி சுமார் 30 லட்ச ரூபாய் வரை இழந்து, மனமுடைந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல, சென்னை செம்பியத்திலும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் கோவை சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த 28 வயதான மதன்குமார் என்ற இளைஞரும் ஆன்லைன் ரம்மியால் கடனாளியாகி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்த மதன்குமார், ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மூழ்கியுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டின் தந்திரமே, புதிதாக அதில் சேர்பவர்களை ஆரம்பத்தில் ஜெயிக்கவிட்டு, அதற்கு அடிமையான பின் அவர்களை மொத்தமாக சுரண்டி ஓட்டாண்டியாக்குவதுதான் என்கின்றனர் அனுபவஸ்தர்கள்.

அந்த வகையில் மதன்குமாரும் ஆன்லைன் ரம்மியில் தொடக்கத்தில் ஆயிரங்களையும் லட்சங்களையும் வென்றிருக்கிறார். ஆனால் போகப்போக பணத்தை இழக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இழந்த பணத்தை மீட்கிறேன் பேர்வழி என தனது இருசக்கர வாகனத்தை விற்றும், உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கடன் வாங்கியும் ஆன்லைன் ரம்மி விளையாட்டை அவர் தொடர்ந்து விளையாடியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இருந்ததையும் இழந்து கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார் மதன்குமார். அந்த மன உளைச்சல், அவரை மதுவின் பக்கம் அழைத்துச் சென்று அதற்கும் அடிமையாக்கி இருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மதன்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் கூறுகின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை முற்றாகத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறம் வலுத்துக்கொண்டே வருகிறது.

அதேநேரம் இதுபோன்ற விளையாட்டுகளின் ஆரம்ப கட்டத்தில் இருப்பவர்கள், உடனடியாக அதனை விட்டு விலகி உடற்பயிற்சி, புத்தக வாசிப்பு, யோகாசனம் செய்தல் என கவனத்தை வேறு திசையில் திருப்புவது நல்லது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments