அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமானது..!

0 3298
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமானது..!

எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று, நீட் தகுதித் தேர்வில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் ஒப்புதல் வழங்குவதற்கு தாமதமாகி வந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆளுநர் திங்கட்கிழமைக்குள் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புவதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்திருந்தது.

இதன் பிறகும் ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்கு தாமதமானால், உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் ஆளுநர் சட்ட ஆலோசனை கேட்டு, கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கடிதம் அனுப்பியதாகவும், அதற்கான பதில் சொலிசிட்டர் ஜெனரலிடம் இருந்து நேற்று கிடைக்கப் பெற்றதாகவும் ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதங்களின் நகல்களையும் வெளியிட்டுள்ள ஆளுநர் மாளிகை, சட்ட ஆலோசனை கிடைத்தவுடனேயே, மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆளுநர் அனுப்பிய கடிதத்தில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு இசைவானதா என கேட்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உள்ஒதுக்கீடு மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு இசைவானதுதான் என சொலிசிட்டர் ஜெனரல் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மசோதா ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாகியிருப்பதன் மூலம், அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு மருத்துவப் படிப்பில் 303 இடங்கள் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 26 அரசு மருத்துவக் கல்லூரிகள், 15 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்று 50 மருத்துவ உயர் கல்வி நிறுவனங்களில் சுமார் 7,200 இடங்கள் உள்ளன. தற்போது அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதன் மூலம், 300-க்கும் மேற்பட்ட இடங்கள் அவர்களுக்கு கிடைக்கும். எஞ்சிய இடங்களுக்கும் பொது இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்கள் போட்டியிட முடியும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டு வரும் 11 மருத்துவக் கல்லூரிகள் முழுவீச்சில் செயல்பாட்டுக்கு வரும்போது அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு கிடைக்கும் இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments