15 வயதில் மனைவி, 17 வயதில் 2-வது திருமணம்.. போக்சோவில் இரண்டு இளைஞர்கள் அதிரடி கைது

0 5573

சிறுமியை குழந்தைத் திருமணம் செய்த இளைஞர் மற்றும் கடத்திச் சென்று இரண்டாவது திருமணம் செய்த டிரைவர் என இரண்டு பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை, சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் வெல்டிங் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த உறவினர் ஒருவருக்கு கடந்த 2018 - ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். சிறுமி தனது கணவரின் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், சிறுமியின் உறவினர் ஒருவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு உதவியாக சிறுமி மருத்துவமனையில் இருந்துள்ளார். அதே மருத்துவமனையில் முத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சிவா என்பவர் விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவமனையில் சிறுமிக்கும் சிவாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சிறுமியின் கணவருக்குத் தெரிந்து அவர் கண்டித்துள்ளார்.

இதனால், கணவரிடம் கோபித்துக் கொண்ட சிறுமி கோவையிலுள்ள தன் பெற்றோரின் வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு, திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி காவல் துறையினர் தனிப்படை அமைத்து சிறுமியைத் தேடி வந்தனர். இதற்கிடையே, சிறுமி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த மச்சூர் பகுதியில் இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தொடர்ந்து மச்சூர் சென்ற தனிப்படை போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர். சிறுமியை கடத்திச் சென்ற சிவா, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும் தெரிய வந்தது.

இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சிறுமிக்கு தற்போது 17 வயது என்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. சிறுமிக்கு 15 வயதில் திருமணம் செய்து வைத்த பெற்றோர் மற்றும் கணவர், கணவரின் தாய் ஆகியோர் மீது குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியைக் கடத்திச் சென்று இரண்டாவது திருமணம் செய்த சிவா மற்றும் சிறுமியின் கணவர் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments